கிணறுகளில் கொட்டப்படும் காஸ்டிங் மண்ணால் நிலத்தடி நீருக்கு ஆபத்து! உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை

பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்தில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி தோட்ட கிணறுகளை மூட காஸ்டிங் மண் பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என, இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, பன்னிமடை சோமையம்பாளையம் ஊராட்சிகளில் பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை மூட, சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவு மண்ணை (காஸ்டிங் மண்) பயன்படுத்துகின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர், பயன்படுத்த முடியாத அபாய நிலைக்கு செல்லும். இதனால் பொதுமக்கள் உடல் நலத்துக்கு பெரும் சீர்கேடு ஏற்படும் என, இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தடாகம் வட்டாரத்தில் உள்ள முன்னோடி விவசாயிகள் கூறுகையில்,’ தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிணறுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதிக அளவு ஆழமுள்ள கிணறுகளில் உள்ள மோட்டார்கள் பழுதாகும் போது, அதை பழுது பார்ப்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும், பழுது பார்க்க தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் கிணறுகளில் தவறி விழுந்து விடுமோ, என்ற அச்சத்தில் விவசாயிகள், கிணறுகளை மூட முடிவு செய்துள்ளனர்.

இதனால் கடந்த, 10 ஆண்டுகளாக பலர் தங்களுடைய தோட்டங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து விட்டனர்.

தடுப்பணைகளில் இருந்து மண் எடுக்கவும் அனுமதி இல்லை. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சின்னதடாகம், வீரபாண்டி, பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மண் எடுத்துச் செல்ல தடை இருப்பதால், கிணற்றை மண் கொண்டு மூட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிலர் காஸ்டிங் மண் கொண்டு கிணறுகளை மூட முயற்சித்து வருகின்றனர்.

இதனால் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் மாசுபட்டு சுற்றுப்புற சூழலுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இது குறித்து, விவசாயிகளிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, காஸ்டிங் மண் கொண்டு கிணறுகளை மூட தடை விதிக்க அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.