சர்க்கரைக்கு ‘நோ’ சொல்லும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள்; ‘சுகர் போர்டு’ வைத்து விழிப்புணர்வு

கோவை; சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்வதால்ஏற்படும் அபாயங்கள் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘சுகர் போர்டு’ அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அதிகரித்து வரும் டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்த பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.முன்பு முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட, டைப் 2 சர்க்கரை வியாதி, தற்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), மாணவர்களைக் கண்காணிக்கும் வகையில், பள்ளிகளில் ‘சுகர் போர்டு’ எனப்படும், சர்க்கரை விழிப்புணர்வுப் பலகைகளை அமைக்க அறிவுறுத்தியது.

உடல் பருமன் பிரச்னைகள் தொடர்பாக, தினசரி சிற்றுண்டி மற்றும் உணவுகளில் எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தைக் காண்பிக்கும், ‘எண்ணெய் பலகைகளை’ வைக்கவும் தற்போது அறிவுறுத்தியுள்ளது. இந்தபலகைகளில், அத்தியாவசிய தகவல்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு மாணவர் தினசரி உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட, சர்க்கரையின் அளவு, பொதுவாக உட்கொள்ளப்படும் துரித உணவுகள், குளிர்பானங்கள் போன்ற சத்தில்லாத உணவுகளில் உள்ள சர்க்கரையின் அளவு, அதிக சர்க்கரை உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும்பிரச்னைகள் மற்றும் அவற்றுக்கு மாற்றாக உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் குறித்த விவரங்கள், இந்தபலகைகளில் தெளிவாககுறிப்பிடப்பட வேண்டும்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அனைத்தும், இந்த ‘சுகர் போர்டு’களை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், கோவை சவுரிபாளையத்தில் உள்ள, பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில், இந்த ‘சுகர் போர்டு’ நிறுவப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்களுக்குத் துரித உணவுகளால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்னைகள் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ‘சுகர் போர்டு’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பலகைகள் மாணவர்களின் கண்ணில் அடிக்கடி படுவதால், அவர்களுக்கு இது குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படும். சர்க்கரை, ஆயில் பயன்பாட்டை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வர்’ என தெரிவித்தனர்.