துரத்தும் நாய்கள்… தெறித்து ஓடும் மக்கள்! காப்பகம் அமைத்தால் நிம்மதி கிடைக்கும்

வீ ட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிக்க முடியாமல் சிலர் தெருவில் விட்டு விடுகின்றனர். அவற்றுக்கு, வீடு, ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் மீதமாகும் உணவு கிடைப்பதால், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள்,வாகனங்கள் வரும் போது, ரோட்டின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.

இது மட்டுமின்றி, நடந்து செல்வோரும், நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்துடன் ரோட்டை வேகமாக கடக்கின்றனர். ரோட்டில் சுற்றும் நாய்களால், பொதுமக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். குழந்தைகள் ரோட்டில் விளையாட முடியாத சூழலும் உள்ளது.

குறிப்பாக, இறைச்சி கடைகள் அதிகம் உள்ள பகுதிகளிலும் நாய்கள் கூட்டமாக சுற்றுகின்றன. ஓம்பிரகாஷ் தியேட்டர் பின்புறம் ஜோதிநகர் செல்லும் ரோட்டோரத்தில், இறைச்சி கழிவுகள் வீசப்படுகின்றன. இவற்றை உட்கொள்ள நாய்களிடையே மோதல் ஏற்படுகிறது.அவ்வழியாக வரும் வாகன ஓட்டுநர்களையும், பொதுமக்களையும் துரத்தி கடிக்க முயற்சிப்பதாக குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களை அடித்து துன்புறுத்தக் கூடாது என, பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்புகள்வலியுறுத்துகின்றன. ஆனால் இவற்றால் பாதிப்பு ஏற்படும் போது என்ன செய்வது என தெரியவில்லை.

கட்டுப்படுத்தப்படுமா? விலங்குகள் நலவாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வாயிலாக, நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை சொற்ப அளவில் இருப்பதாலும், ஆட்கள் கிடைக்காத நிலையில், நாய்களை பிடிக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

கால்நடைத்துறையில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ஒரு குழு அமைத்து, உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து அதற்கான பணிகளை கவனிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காப்பகம் தேவை கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதில், முக்கிய இடங்களான ஆர்.எஸ்., ரோடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடை அருகே தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும், கோதவாடி பிரிவில் பேக்கரி அருகே நாய்கள் அதிகம் இருப்பதால் இரவு நேரத்தில் அவ்வழியில் வாகனத்தில் செல்பவர்களை துரத்துகின்றன. இதை கட்டுப்படுத்த தாலுகா அளவில் நாய்கள் காப்பகம் அமைக்க திட்டமிட வேண்டும்.

அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், 92 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஜனவரி முதல் கடந்த மாதம் வரை, 2,163 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். கிராமம், பேரூராட்சிகளிலும் இதுபோன்று நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இங்க கொஞ்சம் வித்தியாசம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பரப்பில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் அதிகமாக காணப்படுவதால், தெருநாய்களை கவ்விச்சென்று, சிறுத்தை இரையாக்கி கொள்கிறது. வால்பாறை நகரில், சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், நகரப்பகுதியிலும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சிறுத்தைகளை கண்டு தான் ஓட்டம் பிடிக்க வேண்டியுள்ளது என்கின்றனர் மக்கள். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”வனப்பகுதியில் உணவு கிடைக்காத நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து தெருநாய்களை வேட்டையாடுகின்றன. வால்பாறை வனப்பகுதியில் குடியிருப்புகளில் நாய், பூனை உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டாம் என, அறிவுறுத்தி வருகிறோம்,”என்றனர்.

நடவடிக்கை எடுக்கணும்!


விக்ரம், தாமரைக்குளம்: கிராமத்தில், ஒரு சில இடங்களில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இவைகள் ரோட்டில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களை துரத்தி அச்சுறுத்துகின்றன. இதனால் தெருக்களில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக, மாலை நேரத்தில் தெருக்களில் குழந்தைகள் விளையாடும் போது நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் பயப்படுகின்றனர். பைக்கில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், பொள்ளாச்சி: நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் செல்வோரை துரத்துவதுடன், கடித்தும் விடுகின்றன. வாகனங்களில் வேகமாக செல்வோர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மக்களின் கஷ்டம் புரிந்து, நாய்களை பிடித்து காப்பகம் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.

தட்சணாமூர்த்தி, சின்னவீரம்பட்டி: சிறுவர்கள், பெரியவர்களை கடிப்பதோடு, ரோடுகளில் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. கிராமங்களில், ஆடு, மாடு, கோழிகளை வெறிநாய்கள் கடித்து குதறும் சம்பவங்களும் நடக்கிறது. விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. தற்போது, நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம், என அரசு திட்டமிட்டுள்ளது. இனிமேலாவது, அதிகாரிகள் தெருநாய்கள் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிக்கணும்!

பிராணிகள் வளர்ப்பாளர் பொள்ளாச்சி ஜெயபிரகாஷ் கூறுகையில், ‘நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான தெருநாய்கள் காணப்படுகின்றன. உணவு தேடி திடீரென ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது. பலர், குடியிருப்பு வீடுகளுக்கு பாதுகாப்பு என கருதினாலும், நோய்வாய்ப்படும் நாய்களால் பிரச்னை எழுகிறது. நிரந்தர தீர்வு காண, தனியார் அமைப்பு வாயிலாக தெருநாய்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நோய்வாய்ப்பட்ட, விபத்தில் கால் இழந்து தவிக்கும் நாய்களைக் கண்டறிந்து, காப்பகத்தில் வைத்து பராமரிக்க தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்.