கோவை : ‘கோவையில் வரும் செப்., மாதத்துக்கு பின், எக்காரணத்துக்காகவும் ரோட்டை தோண்டக்கூடாது’ என, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, முதல்வர் ஸ்டாலின், கறாராக உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில், மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக, அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, நாளிதழ்களில் வரும் செய்திகள், பொதுமக்கள் அனுப்பிய புகார்கள் மற்றும் உளவுத்துறை மூலம் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாக வைத்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி சார்பில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நகர பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, ‘புதிதாக ரோடு போடுவதற்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கினேனே… ரோடு போடும் பணி முடிந்து விட்டதா…’ என்கிற கேள்வியை முதல்வர் கேட்டார்.
அதற்கு, ‘புதிதாக ரோடு போடும் பணிகள் நடந்து வருகின்றன; விரைவில் முடியும்’ என, கமிஷனர் பதிலளித்தார்.
‘இன்னும் நிதி தேவைப்படுமா…’ என, முதல்வர் கேட்டதற்கு, ‘மேலும், 50 கோடி ரூபாய் தேவைப்படும். எந்தெந்த வீதிகளில் ரோடு போட வேண்டுமென்கிற பட்டியல் தயார் செய்துள்ளோம்.
செப்., வரை ரோடு தோண்டப்பட்டு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்படும். பருவமழை துவங்கும் முன் பணியை முடித்து, புதிய ரோடு போட ஆரம்பித்து விடுவோம்’ என, கமிஷனர் கூறியுள்ளார்.
‘எக்காரணம் கொண்டும் செப்., மாதத்துக்கு பின், புதிதாக ரோட்டை தோண்டக்கூடாது. தோண்டிய ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்’ என, முதல்வர் கறாராக உத்தரவிட்டார்.
முன்னதாக, ‘செம்மொழி பூங்கா கட்டுமான பணி ஆக., மாதத்துக்குள் முடியுமா’ என்கிற கேள்வியை முதல்வர் கேட்டார்.
அதற்கு, ‘மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. செடிகள் நன்கு வளர்வதற்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் தேவை; பசுமையாக இருந்தால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியும். செப்., மாதத்துக்குள் முடித்து விடுவோம்’ என, கமிஷனர் பதிலளித்தார்.
பின், வ.உ.சி., மைதானம் அருகே ஆடீஸ் வீதியிலும், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியிலும், ரோடு மோசமாக இருப்பது தொடர்பாக, முதல்வர் கேள்வி எழுப்பினார். அவ்விரண்டு இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன; விரைந்து முடிக்கப்படும் என பதிலளிக்கப்பட்டது.
Leave a Reply