‘முதல்வர் கோப்பை’ விளையாட்டு; முதலிடம் பிடிக்குமா கோவை?

கோவை; தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, ஆக., 26 முதல் செப்., 10 வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்தாண்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் என, 53 ஆயிரத்து 576 பேர் பதிவு செய்தனர். இதில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோவை நேரு ஸ்டேடியத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. அரசு ஊழியர்களுக்கான இறகுப்பந்து போட்டியில், கலெக்டர் பவன்குமார் இரட்டையர் பிரிவில் முதலிடம், ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.ராஜ்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.கலெக்டர் பேசுகையில், ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரிவுகள் ரீதியாக முதல், இரண்டு, மூன்று என, தலா, 854 பரிசுகள், மண்டல அளவில் முதல், இரண்டு, மூன்று என தலா, 112 பரிசுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவிலான பரிசுத்தொகையாக முதலிடத்துக்கு ரூ.3,000, இரண்டாம் இடத்துக்கு ரூ.2,000, மூன்றாம் இடத்துக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. மாநில அளவிலான போட்டியில் கடந்தாண்டு கோவை மூன்றாமிடம் பிடித்தது. இந்தாண்டு முதலிடம் பிடித்து பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.