பொள்ளாச்சி; நுண்ணுாட்ட சத்துகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துமாறு, உணவு பாதுகாப்பு துறையினர், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நம் உடல்நிலைக்கு ஏற்ற, தேவையான சத்துக்களை தரக்கூடிய உணவுகளை போதுமான அளவு உண்பதே ‘ஆரோக்கிய’ உணவாகும். ஆனால், இக்காலகட்டத்தில், ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கும் உணவுகள், செயற்கையான கலப்படம் வாயிலாக நச்சுத்தன்மை அடைகின்றன.

துரித உணவுகளால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதில், ரத்த சோகை, நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதனை தடுப்பதற்காக, உணவு பொருட்களில் நுண்ணுாட்டச் சத்துக்கள் பாதுகாப்பான முறையில் சேர்த்து செறிவூட்டப்படுகிறது. அதற்கேற்ப, அரிசி, கோதுமை மாவு, பால், சமையல் எண்ணெய், உப்பு ஆகிய உணவுப் பொருட்களில் செறிவூட்டல் செய்ய மத்திய அரசும் அங்கீகாரம் அளித்துள்ளது.
அவ்வகையில், உணவு பாதுகாப்பு துறை வாயிலாக, செறிவூட்டப்பட்ட அரிசி, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு, செறிவூட்டப்பட்ட எண்ணெய் பயன்படுத்த மக்களிடையே பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, பொள்ளாச்சி நகரில், பள்ளி, கல்லுாரிகள் தோறும் ‘செறிவூட்டப்பட்ட உணவு என்பது இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருளாகும். செறிவூட்டப்பட்ட உணவுகள், ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பாதிப்பை தடுக்கும்,’ என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இது குறித்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
உணவுப் பாதுகாப்புத் துறையினர், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கலப்படம் இல்லாத செறிவூட்டப்பட்ட உணவை உறுதி செய்கின்றனர்.
இயற்கை உணவில் இல்லாத, நுண்ணுாட்டச்சத்துக்களை செயற்கையாக உணவில் சேர்ப்பது, செறிவூட்டப்பட்டப்பட்ட உணவாகும். அவ்வகையில், செறிவூட்டப்பட்ட உணவு என்பதை கண்டறிய, உணவு பொட்டலங்களில் ‘பிளஸ் எப்’ குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
அதன் வாயிலாக, அரிசி, கோதுமை, பால், உப்பு, எண்ணெய் ஆகிய உணவுகளில் வைட்டமின் ஏ, டி, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம். எனவே, ‘பிளஸ் எப்’ குறியீடு கொண்ட உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அனுராதா கூறினார்.
இயற்கை உணவில் இல்லாத, நுண்ணுாட்டச்சத்துக்களை செயற்கையாக உணவில் சேர்ப்பது, செறிவூட்டப்பட்டப்பட்ட உணவாகும். அவ்வகையில், செறிவூட்டப்பட்ட உணவு என்பதை கண்டறிய, உணவு பொட்டலங்களில் ‘பிளஸ் எப்’ குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
Leave a Reply