தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தில், பல பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை நிலவும் நிலையில், பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை மாற்ற வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை, எவரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இந்த அலுவலகங்களை மாற்றினால், மாணவர்களுக்கு வகுப்பறை வசதி கிடைக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி பள்ளி வளாகங்களில் உள்ள கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்யாமல் இருப்பது ஏன் என, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கோவை மாவட்டத்தில், 193 அரசு மற்றும் அரசு உதவி பெறும், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள், 1,200க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்காக, 15 வட்டாரங்களும், 4 கல்வி மாவட்டங்களும் உள்ளன.
இதில், பெரும்பாலான கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளி வளாகங்களிலேயே உள்ளன. இதனால், பள்ளி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, அந்த உத்தரவை, அதிகாரிகள் பின்பற்றவில்லை என, கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் கல்வி அலுவலகங்களை உடனடியாக வேறு வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என, கடந்தாண்டு உத்தரவிடப்பட்டது.
ஆனால், தற்போது, வரை எந்த அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர், பேரூர், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, வால்பாறை ஆகிய, வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு துவக்கப்பள்ளி வளாகத்திலும், பேரூர் மாவட்ட கல்வி அலுவலகம், குனியமுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது.
அரசின் உத்தரவை, அதிகாரிகளே பின்பற்றாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுகின்றது.
‘அடிக்கடி கல்வி அதிகாரிகள் காரில் வந்திறங்குவதால், மாணவர்கள் மத்தியிலும் பதற்றமும் கவனச்சிதறலும் ஏற்படுகிறது.
‘பல பள்ளிகளிலும், வகுப்பறை கட்டடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், கூடுதல் வகுப்பறைகள் கிடைக்கும்’ என்றனர்.
Leave a Reply