சி.சி.டி.வி., பொருத்தும் போது ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ கட்டாயம்! ‘ஹார்ட் டிஸ்க்’ திருடினாலும் காட்சிகளை மீட்கலாம்

கோவை; வீடு, அலுவலகங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தால், கண்டுபிடிக்க சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை,’கிளவுட் ஸ்டோரேஜில்’ சேமித்து வைக்க வேண்டும் என,போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

Latest Tamil News

தற்போது உள்ள தொழில்நுட்ப காலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் பயன்படுவது, சி.சி.டி.வி., கேமராக்கள் தான்.சி.சி.டி.வி., பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் அறிவுறுத்தல்

இதனால், வீடு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துவது அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. முக்கிய சாலைகள், கட்டடங்கள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும், சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதின் முக்கியத்துவத்தை, போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் இருப்பதால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர், கேமராக்களில் முகம் பதிவாகாத வகையில், குற்றங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில், திட்டமிட்ட கொலை, கொள்ளை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களை செய்யும் குற்றவாளிகள், போலீசாரிடம் இருந்து தப்பிக்க, சி.சி.டி.வி., காட்சிகள் பதிவாகியிருக்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர், நெட் வொர்க் வீடியோ ரெக்கார்டர் கருவிகளை, ‘ஹார்ட் டிஸ்க்’ உடன் எடுத்து செல்கின்றனர்.கடந்த 14ம் தேதி சிங்காநல்லுார், பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, சி.சி.டி.வி.,யின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் கருவியை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சந்தா பெறுவது முக்கியம்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ”கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுகின்றனர்; அலுவலகம் அமைக்கின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களை நிறுவுகின்றனர். மிகவும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க வேண்டி, சி.சி.டி.வி., அமைக்கின்றனர். சி.சி.டி.வி., பொருத்தும் யாரும், ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ சந்தா பெறுவதில்லை. திட்டம் போட்டு பெரிய அளவில் திருடும் நபர்கள், டிஜிட்டல்வீடியோ ரெக்கார்டர், நெட் வொர்க் வீடியோ ரெக்கார்டர், ‘ஹார்ட் டிஸ்க்’ யையும் சேர்த்து திருடி செல்கின்றனர்.இதனால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சி.சி.டி.வி., பொருத்தும் போது, ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ சந்தாவுடன் பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. ஒருவேளை, ஹார்ட் டிஸ்க் திருட்டு போனாலும், ‘கிளவுட்’ல் பதிவாகியுள்ள காட்சிகள், குற்றவாளிகளை பிடிக்க உதவும்,” என்றார்.

‘நுாறு பேரில் ஒருவர்தான் சந்தாதாரர்’

சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் தொழில் செய்யும் சவுந்தர் ராஜன் கூறுகையில், ”சி.சி.டி.வி.,கேமரா பொருத்தும், 100 பேரில் ஒருவர் தான் ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ சந்தா பெறுகிறார். ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ சந்தாவுக்கு மாதா, மாதம் பணம் செலுத்த வேண்டியுள்ளதால் பலர் அதை விரும்புவதில்லை.பலர் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்,நெட் வொர்க் வீடியோ ரெக்கார்டர் மட்டும் பொருத்துகின்றனர். இந்த கருவிகளை பெரும்பாலும் வீட்டின் டி.வி., அருகில் தான் வைக்கின்றனர். அப்படி இல்லாமல், அவற்றை யாருக்கும் தெரியாத இடத்தில், திருடிச் செல்ல முடியாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்,” என்றார்.