கோவை: இயேசு ஆராதனை என்ற பெயரில் ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் என சமூக வலைதளங்களில் கலக்கி வந்த பிரபல மத போதகரான ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் பேசியதாக சில ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் இயேசு ஆராதனை என்றால் மிக அமைதியான முறையில் பாதிரியார்கள் நற்செய்தி வழங்கி இறை மக்களை ஆசிர்வதிப்பார்கள். அதற்குப் பிறகு ட்ரெண்ட் மாறிவிட்டது. விடிய விடிய ஆடல் பாடல் என ஆராதனை மாறிவிட்டதாக குற்றம் சாட்டினர் சில மூத்த மத பிரச்சாரகர்கள்.
அதற்கு காரணம் கோவையை சேர்ந்த ஜான் ஜெபராஜ் தான். மத போதனை நிகழ்ச்சிகளை ஆடல் பாடல் கச்சேரிகள் போல மாற்றி அதில் மக்களை நடனம் ஆட வைத்து தானும் நடனமாடி மத போதனை நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர் ஜான் ஜெபராஜ்.
பார்ப்பதற்கு ஏஆர் ரகுமான் இசை கச்சேரி போல பிரம்மாண்டமாக மத போதனைகளை நடத்த பல மூத்த மத போதகர்கள் அவர் மீது வெறுப்பை கொட்டினர். இருந்தாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆராதனை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் ஜெபராஜ். தொடர்ந்து எட்வின் ரூசோ என்பவருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் கிங் ஜெனரேஷன் என்ற பிரார்த்தனைக் கூடத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.இதற்கிடையே ஜான் ஜெபராஜ் சில சிறுமிகளை முத்தமிடுவது போல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜான் ஜெபராஜுக்கு பிடிக்காதவர்கள் அவர் குறித்த சில வீடியோக்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிர்ச்சி தரும் விதமாக ஜான் ஜெபராஜ் மீது பாலியல் வழக்கு பாய்ந்திருக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ஜான் ஜெபராஜ் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்திருக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்த 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் அளித்த புகாரி, அடிப்படையில் கோவை மாநகர் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதை அறிந்து ஜான் ஜெபராஜ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கைது செய்ய கோவையில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். மேலும் தென்காசி, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜான் ஜெபராஜ் பேசியதாக சமூக வலைதளங்களில் சில ஆடியோக்கள் உலாவி வருகிறது. அதில்,”நம்ம இரண்டு பேருக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. அதை வைத்து யாரோ கேம் விளையாடி அசிங்கத்தை ஏற்படுத்தி, உன்னை நடுத்தெருவில் நிறுத்தி இருக்காங்க. என்னையும் துரத்தி துரத்தி ஓட வச்சிருக்காங்க. கர்த்தர் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி பிரச்சினை நடக்கும் போது எல்லாம் மனுஷனுக்கும் செத்துப் போயிடலாம்னு தோணும். எனக்கும் அந்த மாதிரி நான்கு ஐந்து முறை எண்ணம் வந்தது. சாப்பிடவில்லை.. ஒன்பது கிலோ எடை குறைஞ்சிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்றேன். இப்படி தப்பு பண்ணிட்டு எப்படி இப்படி செய்கிறான் என்று நினைக்கலாம். நம்ம ரெண்டு பேருக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும். கர்த்தர் என்னை பார்த்துக்கொள்வார். மறுபடியும் சொல்றேன். உன்னை நான் பொது இடத்தில் அசிங்கப்படுத்த மாட்டேன்” என அதில் பேசியிருக்கிறார். யாரை குறிப்பிட்டு இந்த ஆடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார் என்பது தான் தெரியவில்லை.
Leave a Reply