கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர் சாலை, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள் குறித்த முழு விவரம் தெரிந்து கொள்ளலாம்.
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு கீழ்காணும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறையை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். 11 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று காலை வழக்கம்போல் நடைபெறும் என்றும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூர் விடுமுறை என தெரிவித்துள்ளார்.
1. CCMA மகளிர் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி. 2. வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, இராஜவீதி. 3. புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி, இராஜவீதி,
4. சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 5. SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 6. புனித ஃப்ரான்ஸிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி.
7. புனித ஜொசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 8. புனித மெரீஸ் மேல்நிலைப் பள்ளி. 9. புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி. 10. மில்டன் மெட்ரிக் பள்ளி. 11. ஷ்ருஸ்டி வித்யாலயா. 12. வாசவி வித்யாலயா. 13. மதர்லாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. 14. T.E.LC நடுநிலைப் பள்ளி. 15. ICC நடுநிலைப் பள்ளி. 16. நல்லாயன் தொடக்கப் பள்ளி. 17. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்பணக்காரர் வீதி.
18. ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி. 19. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி கோவை நகரம் VH ரோடு. 20. CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. 21. மன்பல் உலும் தொடக்கப் பள்ளி. 22.மன்பல் உலும் மேல்நிலைப் பள்ளி. 23,பிரசென்டேசன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி. 24.மாரன்னகவுண்டர் உயர்நிலைப் பள்ளி ஆகிய 24 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரில் போக்குவரத்து மாற்றம் குறித்து, கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக மாநகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலது புறம் திரும்பி அசோக்நகர் ரவுண்டானா, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டும். வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடைந்து செல்லலாம். மருதமலை ரோடு தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்தப் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம் புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம். உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம். சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்த்திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர் செல்லும் போது பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்கக்கூடாது. பக்தர்கள் அதிக ஒலியை எழுப்பக் கூடிய ஊதுகுழல்களை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர யாரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தேரை நெருங்கக்கூடாது. அப்படி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் கோனியம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள கார் பார்க்கிங் மற்றும் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply