கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அறையில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கஞ்சா, மாத்திரை, கஞ்சா ஆயில், போதை சாக்லேட் உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் இளைஞர்கள், கல்லூரி இளைஞர்களைக் குறிவைத்தே இதுபோன்ற போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. போதைப் பொருள்கள் கும்பலை ஒடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள், அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், பிரபலமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் கல்வி, வேலைக்காக இங்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். இதுபோன்று தங்கியிருக்கும் இளைஞர்கள் சிலர் போதைப்பொருள்கள் வைத்திருப்பதாகவும், புழக்கத்தில் விடுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் போலீஸார் திடீர் சோதனைகள் மேற்கொண்டு கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் அறையில் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், போதைப் பொருள்கள் விற்பனை, புழக்கம் குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் குனியமுத்தூர், கோவை புதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அறையில் 24 கஞ்சா செடிகளை கல்லூரி மாணவர்கள் வளர்த்து வந்தது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 24 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். அறையில் கஞ்சா வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் விஷ்ணு, அனிருத், தனுஷ், அபிநவ் கிருஷ்ணா மற்றும் கலைவாணன் ஆகிய ஐந்து பேரை கைது போலீஸார் செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் கலைவாணனைத் தவிர மற்ற நான்கு பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply