சென்னை: பூப்பெய்திய மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், கோவை தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், அலுவலக உதவியாளரின் ஜாமீன் மனுக்களை, அவர்கள் சரணடையும் நாளில் பரிசீலிக்க கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டை பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய 8 ஆம் வகுப்பு மாணவியை, வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 7 ம் தேதி அறிவியல் தேர்வு 9 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற்ற போது அந்த மாணவியை தேர்வு மையத்தில் அனுமதிக்காமல் பள்ளி வகுப்பறை முன்பு உள்ள படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்து உள்ளனர். அப்போது மாணவியை பார்ப்பதற்காக அங்கு வந்த அவரது தாய் மற்றும் உறவினர் ஆகியோர் மாணவி வெளியில் அமர்ந்து தேர்வு எழுதுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார். பள்ளி முதல்வர்தான் தன்னை வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று விடியோவில் மாணவி கூறியிருந்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மூவரும் சரணடையும் நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பள்ளி நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவியின் தந்தை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். மேலும் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகிய மூவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply