பெ.நா.பாளையம்; காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வட்டார குழுக்கள் இதுவரை அமைக்கப்படாததால், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகம் முழுவதும், மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டுப்பன்றிகள் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், அதை வேட்டையாடுவது வனத்துறை சட்டப்படி குற்றம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் நிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் சேதம் ஏற்படுத்தினாலும், அதை விரட்டவோ அல்லது வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ விவசாயிகள் அச்சப்படுகின்றனர். இதனால் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக பெருகி, வேளாண் பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு கடந்த ஜன.,ல் சட்டசபை கூட்டத்தில் காட்டுப் பன்றிகளை ஒழிக்க, சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இதன்படி, காட்டுப்பன்றிகள் வன எல்லையில் இருந்து, 3 கி.மீ.,க்குள் இருந்தால், அதை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் பொதுமக்கள் நடமாடும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுப் பன்றிகள் அதிக அளவில் தென்பட்டால், அதை வட்டார குழுக்கள் வாயிலாக, மாவட்ட குழுவுக்கு தெரிவித்து, காட்டுப் பன்றிகளை வேட்டையாட நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது குறித்து, கோவை வடக்கு தடாகம், நஞ்சுண்டாபுரம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,’ இதுவரை காட்டுப்பன்றியை ஒழிக்க வட்டார குழுக்கள் அமைக்காததால், தமிழக அரசின் அறிவிப்பு, வெறும் அறிவிப்போடு நிற்கிறது. செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசாணையின் வழிகாட்டுதல்படி, வனவர், வி.ஏ.ஓ., ஊராட்சி மக்கள் பிரதிநிதி உள்ளிட்டோரை கொண்டு முதல் கட்ட கிராம குழுக்கள் அமைக்கப்படும். அடுத்த கட்டமாக வனவிலங்கு ஆர்வலர்கள் உள்ளிட்டவரை கொண்ட வட்டார குழுக்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். வட்டார குழுக்களின் அறிக்கையை கலெக்டர், புலிகள் காப்பக துணை இயக்குனர், வேளாண் இணை இயக்குனர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள மாவட்ட குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், மாவட்ட குழு தான் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான அனுமதியை வழங்கும்.
ஆனால், இதுவரை எந்த ஒரு குழுவும் கோவையில் அமைக்கப்படவில்லை. இதனால் காட்டு பன்றியை ஒழிப்பதற்கான திட்டம் வெறும் திட்டமாக மட்டுமே உள்ளது. இப்பிரச்சனை குறித்து மாவட்ட அளவில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், விவசாயிகள் கேள்வி எழுப்பினால், வனத்துறையினர் உரிய பதில் அளிப்பதில்லை. சாத்தியமில்லாத இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, கேரளாவில் காட்டுப் பன்றிகளை ஒழிக்க, பின்பற்றப்பட்டு வரும் எளிய வழிமுறையை, தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன் வர வேண்டும் அல்லது காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால், தடாகம் மட்டுமல்லாமல் காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதம் தொடரும்’ என்றனர்.
Leave a Reply