புகை, மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க ‘கவுன்சிலிங்’;அரசு மருத்துவமனையின் முயிற்சியில் 904 பேர் மீட்பு

கோவை : கோவையில் புற்றுநோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களில், 10ல் 4 பேர் மது மற்றும் புகைப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்து, மீட்கப்படுகின்றனர்.

கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில், புகையிலை தடுப்பு ஆலோசனை மையம், 2020 முதல் கோவை அரசு மருத்துவமனையில் செயல்படுகிறது.

Latest Tamil News

புற்றுநோய், இதய பாதிப்புகள், காசநோய் போன்ற பல்வேறு நோய் பாதிக்கப்பட்டோர், புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விடுவதற்கு ‘கவுன்சிலிங்’ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், 400 பேர் புதிதாகவும், 1500 பேர் ‘பாலோஅப்’ பட்டியலிலும் இம்மைய கண்காணிப்பில் உள்ளனர். அதில், புற்றுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர், 18 மாதம் இம்மையத்தால் கண்காணிக்கப்படுகிறார்.

இதுகுறித்து, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் சரண்யா கூறியதாவது:

புற்றுநோய் பாதிப்பில் வரும் பலர் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். இப்பழக்கத்தில் இருந்து விடுபட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ அளிக்கிறோம். 2020 முதல் தற்போது வரை புற்றுநோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட, 904 பேர், ‘கவுன்சிலிங்’, தொடர் கண்காணிப்பு வாயிலாக இப்பழக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளனர்.

ஒரு நபர் ஒன்றரை ஆண்டுகள் இப்பழக்கங்களில் இருந்து விடுபட்டால் மட்டுமே, இப்பட்டியலில் சேர்க்கின்றோம். புகை மற்றும் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்துள்ளோம். பழக்கத்தை விட முடியாமல் தொடர்பவர்களுக்கு சிகிச்சை பெரிதளவில் பலனளிப்பதில்லை. புகைப்பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாதவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஆலோசனை மையத்தில் இலவசமாக ‘கவுன்சிலிங்’ எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

விழிப்புணர்வு முகாம்

ஆலோசனை மைய உளவியல் நிபுணர் தவுபீக் கூறுகையில், ”புற்றுநோய் பாதிப்பு ஏற்படுபவர்களில், 10ல் 4 பேர் புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். புகைப்பழக்கம் உள்ளவர்கள் மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்களும் இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. நேரடி ‘கவுன்சிலிங்’, ‘டெலிபோன் கவுன்சிலிங்’, நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கண்காணிப்பு, ‘டயட்’ ஆலோசனை, சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சிகள், விழிப்புணர்வு முகாம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொண்டு வருகிறோம். ‘கவுன்சிலிங்’ உதவி தேவைப்படுவோர், 1800110456 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், ” என்றார்.