கோவை; கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சராசரியாக தினமும், 40 வழக்குகள் வரை பதிவு செய்கின்றனர். சமீபகாலமாக கல்வி உதவித் தொகை பெற்றுத்தருவதாக நடக்கும் மோசடி நடந்து வருவதால், மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென, போலீசார் எச்சரித்துள்ளனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித் தொகையை வழங்கு கின்றன. இந்த உதவி தொகையை பெற்றுத்தருவதாக, மாணவர்களை ஏமாற்றும் மோசடியை கும்பல் ஒன்று அரங்கேற்றி வருகிறது.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: பிளஸ்1 மற்றும் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தான் இக்கும்பலின் இலக்கு. கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறுகின்றனர். மாணவர்களின் பள்ளி பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிவிப்பதால், மாணவர்கள் அவர்களை நம்புகின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம், அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள், பெற்றோரின் பணி, வருமானம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு, கல்வி உதவித்தொகை கிடைக்க உதவுவதாக தெரிவிக்கின்றனர்.

மொபைல்போனுக்கு க்யூ.ஆர்., கோடு அனுப்பி, அதை ஸ்கேன் செய்ய அறிவுறுத்துகின்றனர். மாணவர்கள் அந்த க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்தால், அவர்களின் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையும் மோசடி செய்யப்படும்.
கல்வி உதவித்தொகை குறித்து, கல்வித்துறையில் இருந்து யாரும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்பதில்லை. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள், பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு, போலீசார் தெரி வித்தனர்.
Leave a Reply