தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் தொய்வு! ரவுண்டானா அமைக்காமல் இழுபறி

மேட்டுப்பாளையம்: காரமடையில் தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ரவுண்டானா அமைப்பதிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.காரமடை நகரில், கோவை, மேட்டுப்பாளையம், தோலம்பாளையம், கன்னார்பாளையம் ஆகிய நான்கு சாலைகள், மிகவும் குறுகலாக உள்ளன. இந்த சாலைகளில், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க காரமடை – தோலம்பாளையம் ரயில்வே மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 28.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

மேட்டுப்பாளையம் – காரமடை சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே துவங்கி, மேட்டுப்பாளையம் ரயில் பாதையை கடந்து, தோலம்பாளையம் சாலையில் சென்றடையும் வகையில், மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பணிகள் முடிக்கவில்லை.தற்போது ரயில் பாதையின் மேல் பகுதியில், ரயில்வே நிர்வாகம் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, 37 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலத்தில் இரும்பு கர்டர்களை, தூண்கள் மீது தூக்கி வைத்தனர். அதன் மீது தற்போது கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணிகளில், பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கூறுகையில்,’ ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில், அமைக்கப்படும் மேம்பாலம், கான்கிரீட் போட்டு ஒரு மாதத்தில் முழுமையாக கட்டி முடித்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்,’ என்றனர்.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் காரமடை – மேட்டுப்பாளையம் சாலையிலும், காரமடை – தோலம்பாளையம் சாலையிலும், இன்னும் ரவுண்டானா அமைக்காமல் இழுத்தடிக்கின்றனர். எனவே தோலம்பாளையம் மேம்பாலப் பணிகளை விரைவாக செய்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் (கட்டுமானத்துறை) துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.