மாணவர்களிடம் அதிகரிக்கிறது சர்க்கரை அறிகுறி! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

கோவை; கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகளில், 10 முதல் 15 வயதுக்குள் உள்ள மாணவர்கள் சிலருக்கு, சர்க்கரை நோய் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதும், வேறு சிலர் துாக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வதும் அறிந்து, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு, வாழ்வியல் மாற்றங்களே காரணம் என்பதால், இவற்றை சரி செய்வதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் மத்தியில், டைப்1 சர்க்கரை பாதிப்பு காணப்படுவது வழக்கம். ஆனால், தற்போது 40 வயதில் பெரியவர்களுக்கு வரும் டைப் 2 சர்க்கரை பாதிப்புக்கான அறிகுறி, 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கு, 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில், பல மாணவர்களுக்கு டைப் 2 சர்க்கரை பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் டாக்டர் சுதா ராமலிங்கம் கூறியதாவது:

கோவையில், 400 பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டோம். 400ல் 16 சதவீத மாணவர்களுக்கு டைப் 2 எனும் பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை பாதிப்பு, அறிகுறிகள் தென்பட்டன.

துாக்கமின்மைக்கு மருந்து

இந்த ஆய்வு கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டது. நகர்புறங்களில் பீசா, பர்கர் எனும் துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டால், இச்சதவீதம் மேலும் அதிகரிக்கலாம்.

ஆய்வு முடிவுகள் பெரும் அபாயத்தை உணர்த்தும் வகையில் உள்ளன. தவிர, 10-15 வயதுள்ள 100 மாணவர்களில், 6-7 பேர் துாக்கமின்மை பிரச்னைக்காக மருந்து எடுத்துக்கொள்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.மொபைல் போன் பயன்பாடு, துாக்கமின்மை பிரச்னைக்கு காரணமாக உள்ளது. இரவு துாங்கும் நேரம் மாறுவதால், மொத்த ஆரோக்கிய ‘சிஸ்டமும்’ மாறிவிடுகிறது.

பெற்றோருக்கு கவனம் தேவை

இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் எனில், பள்ளி, பெற்றோர், அரசு என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும், தினந்தோறும் ஒரு மணி நேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பு வைக்க வேண்டும்.

பிற பாடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று, விளையாட்டு வகுப்புகளுக்கும் அளிக்க வேண்டும்.

சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளையும் தவிர்க்க, குழந்தைகளை பெற்றோர் வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கோவை கிராமப்புறங்களில், 400 பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டோம். 400ல் 16 சதவீத மாணவர்களுக்கு டைப் 2 எனும் பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை பாதிப்பு, அறிகுறிகள் தென்பட்டன. நகர்ப்புறங்களில் பீசா, பர்கர் எனும் உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டால், இச்சதவீதம் மேலும் அதிகரிக்கலாம்.

அனைத்து வகை பள்ளிகளிலும், தினந்தோறும் ஒரு மணி நேரம் கட்டாயம் விளையாட்டு வகுப்பு வைக்க வேண்டும். பிற பாடங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்று, விளையாட்டு வகுப்புகளுக்கும் அளிக்க வேண்டும். சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளையும் தவிர்க்க, குழந்தைகளை பெற்றோர் வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.