தினமலர் – பட்டம் வினாடி வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

கோவை: உப்பிலிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற, ‘பதில் சொல் – பரிசை வெல்’ வினாடி-வினா போட்டியில், மாணவர்கள் தங்கள் அறிவுத் திறமையை வெளிப்படுத்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.’தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’, இந்துஸ்தான் கல்விக்குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பகுதிகளின் மீது ஆர்வத்தை தூண்டி, பொது அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில், ‘பதில் சொல் – பரிசை வெல்’ என்ற வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.

நேற்று உப்பிலிப்பாளை யம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முதற் சுற்று எழுத்து தேர்வில் 30 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் சுற்றில், எட்டு அணிகளில் இருந்து 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘ஏ’ அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் ராஜாராம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி சுதீப்தி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இவர்களுடன், ‘சி’ அணியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் இலமாறன், ஏழாம் வகுப்பு மாணவி எலிசா; ‘எச்’ அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் சாருதேஷ்னா லலிதா மற்றும் யுவஸ்ரீ; ‘டி’ அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் சாய் கார்த்திக், எட்டாம் வகுப்பு மாணவர் நிதிஷ் குமார்; ‘பி’ அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஜகதிஷ் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர் சிவசக்தி ஆகியோர், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.