கோவை: கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 32.50 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 3,117 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அறையில் 17,000 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், 1400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலில், 1200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. கூடுதலாக ஓட்டுச்சாவடிகள் அமையும் இடங்களை தேர்தல் பிரிவினர் அடையாளம் கண்டு வருகின்றனர். புதிய ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான வசதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும் என்பதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், சின்னம் பார்க்கும் விவி பேட் கருவிகள் கூடுதலாக தேவைப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து, 600 கன்ட்ரோல் யூனிட்கள், 1,500 விவி பேட் கருவிகள் புதிதாக தருவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, தொழில் நுட்பக்குழுவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர். ஓட்டுப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இனி கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களோ, இதர கருவிகளோ தேவைப்படாது’ என்றனர்.‘மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட வசதி’
மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று ஓட்டளிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, அனைத்து துறையினருடனான கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில், கலெக்டர் பவன்குமார் பேசியதாவது: ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், கைப்பிடி, சைகை மொழி பெயர்ப்பாளர், பிரைய்லி போர்டு ஏற்பாடு செய்தல், மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் அடையாள அட்டையில் எந்த வகையான மாற்றுத்திறனாளி என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடிக்கு வர இயலாதவருக்கு, வீட்டில் இருந்தே ஓட்டு செலுத்தும் வசதி ஏற்படுத்துதல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம், கழிப்பறை, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்தல், 18 வயது நிறைவடைந்த மாற்றுத்திறனாளிக்கு ஓட்டுரிமை பெறுவது அவசியம். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
Leave a Reply