வடவள்ளி; சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தில், தி.மு.க., நிர்வாகிகள் தலையீடு செய்து வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் கிராமத்தில், தூய்மை பணிக்காக, 35 பணியாளர்களும், 3 டிராக்டர்கள், 14 பேட்டரி வாகனங்களும் உள்ளன.

இந்நிலையில், தங்களுக்கு, துாய்மை பணியாளர் சூப்பர்வைசர்கள் விஜயகுமார் மற்றும் பிரகதீஷ் ஆகிய இருவரும் தனித்தனியாக, பணிகளை கூறுகின்றனர்.
மேலும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தினசரி வந்து, பணிகளை கூறுவதாகவும் சொல்லி, தூய்மை பணியாளர்கள் நேற்று காலை, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தாமோதரன் தரப்பு தி.மு.க.,வினரும், ஆனந்தகுமார் தரப்பு தி.மு.க.,வினரும், பா.ஜ., அ.தி.மு.க., கட்சியினர் என, 50க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் பி.டி.ஓ., ஜென்கின்ஸ், சோமையம்பாளையம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர், தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில், இரண்டு தூய்மை பணியாளர் சூப்பர்வைசர்களும், இனி செயல்படமாட்டார்கள். ஊராட்சி செயலாளரே அப்பணிகளை இனி மேற்கொள்வார். கட்சியினர் யாரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரக்கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து, தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தூய்மை பணிக்கு சென்றனர். தொடர்ந்து, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.,வினர், பி.டி.ஓ., ஜென்கின்ஸ்யை நேரில் சந்தித்து, இது ஊராட்சி அலுவலகமா அல்லது கட்சி அலுவலகமா, இனி அரசியல் கட்சியினர் யாரும் ஊராட்சி அலுவலகத்தில் வந்து பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது. மீறினால், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என, தெரிவித்தனர்.
Leave a Reply