பாதாள சாக்கடை திட்ட வீட்டிணைப்பு பெற பணம் 4கொடுத்து ஏமாறாதீங்க!: நகராட்சியில் செலுத்த மக்களுக்கு அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில், வீட்டிணைப்பு வழங்கும் பணி துவங்கப்பட உள்ளது. இதற்கான பணத்தை நகராட்சியில் மட்டுமே செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள், ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் என யாரிடமும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்,’ என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாளச்சாக்கடை திட்டம், 170 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 பாதாளச்சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Latest Tamil News

மரப்பேட்டை பள்ளம், மாட்டுச்சந்தை, ராஜாராமன் லே-அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டன.

மாட்டுச்சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டிணைப்புகள், 20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், இத்திட்டம் துவங்கியது முதல், வீடு இணைப்பு வழங்குதல் வரை அனைத்திலும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.

அதில், வீட்டு இணைப்புக்கு அதிகப்பட்சமாக பணம் வசூலிப்பதாகவும், முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இணைப்புக்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டுமென வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதிகளவு பணம் கேட்பதால் பலரும் இணைப்பு பெற தயக்கம் காட்டி வந்தனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டு, வீட்டிணைப்பு பணிகள் துவங்கப்பட்டன.

பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை, அதிக கட்டணம் வசூலிப்பு போன்ற காரணங்களினால் கடந்தாண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தற்போது திருத்திய நிர்வாக அனுமதி பெற்று, ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைத்தரகர்கள், ஒப்பந்த பணியாளர்கள் யாரிடமும் பணம் கொடுத்து மக்கள் ஏமாற வேண்டாம் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.