பாரபட்சம் வேண்டாம்! ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம்; கொங்கு மண்டலத்தில் செயல்படுத்த எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; ‘கொங்கு மண்டலத்தில், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி, தடுப்பணை, குட்டை அமைத்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மத்திய அரசின், 90 சதவீதம் நிதியுதவியுடனும், மாநில அரசின், 10 சதவீதம் நிதி என கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேல் வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில், ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்பட்டு வந்தது.

கடந்த, 2009 – 10ம் ஆண்டு இத்திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

இதன் வாயிலாக, மழை காலங்களில் மழைநீரின் ஓட்டத்தை தடுத்து, மழைநீர் மண்ணில் விழும் இடத்திலேயே சேமித்து நிலத்தடி நீரை உயர்த்தும் நோக்குடன் இத்திட்டம், தமிழகத்தில், 24 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.

பணிகள் ஏராளம் இதில், தடுப்பணை கட்டுதல், கால்நடை குட்டை அமைத்தல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், துார்வாருதல், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கழிவு நீர் குட்டைகள் அமைத்தல், சம உயர வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், கோடை உழவு, பண்ணை குட்டை, தாவர வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தனியார் விவசாய நிலங்களில் செய்து தரப்பட்டது.

விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள், தீவனப்பயிர், வேளாண் காடுகள் அமைத்தல் போன்ற பணிகளும் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில், மகளிர் சுய உதவிக்குழு ஏற்படுத்தி நிதி வழங்குதல், தனி நபர்களுக்கு சுய தொழில் துவங்க நிதி வழங்குதல் மற்றும் தையல் இயந்திரம், பெட்டிக் கடை வைத்து கொடுத்தல் போன்ற பணிகள், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அக்கறையில்லை விவசாயிகளுக்கு பயனுள்ள இத்திட்டத்துக்கு, கடந்த, 2015 – 16ம் ஆண்டுக்கு பின், மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதமாக நிதி பகிர்ந்து கொண்டது. நிதி ஒதுக்கீடு குறைந்த பின் மத்திய அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், மாநில அரசு நிதி பெறவில்லை.

கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், பெரம்பலூர் ஆகிய, 7 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 2025 — 26ம் ஆண்டு தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் கொங்கு மண்டலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

புறக்கணிப்பு ஆனால், ஏற்கனவே இத்திட்டம் செயல்பட்டு வந்த தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய, 6 மாவட்டங்களுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் வாயிலாக வலியுறுத்தி நிதி பெற்றுள்ளனர். இதனால், கொங்கு மண்டல விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தலைமை செயல் அலுவலர், இணை இயக்குனர், உதவி செயற் பொறியாளர், நிதி மேலாளர், கணினி ஆப்ரேட்டர் மற்றும் அதிகாரிகளுடன், 24 மாவட்டங்களுக்கு செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது, 6 மாவட்டங்களுக்கு மட்டும் செயல்படுகிறது.

கொங்கு மண்டலத்தை புறக்கணிக்காமல் திட்டத்தை செயல்படுத்தினால்பயனாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மாநிலம் முழுக்க பரவலாக்கணும்!

கடந்த, 2015 – 16ம் ஆண்டு வரை, 24 மாவட்டங்களில், 1,632 நீர்வடிப்பகுதிகளில் இத்திட்டம் செயல்பட்டது. இதில், 842 ெஹக்டேர் பரப்பு மேம்படுத்தப்பட்டது. தற்போது, ஐந்து ஆண்டுகளாக ஏழு மாவட்டங்களில், 230 நீர்வடிப்பகுதிகள் மேம்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் ெஹக்டேர் பரப்பளவில் செயல்படுகிறது. இத்திட்ட பலன் மற்ற மாவட்டங்களுக்கும், கொங்கு மண்டலத்துக்கும் கிடைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். கொங்கு மண்டலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.