குடிநீர் இணைப்புக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்! நேரடியாக நகராட்சியை அணுக கமிஷனர் அறிவுரை

பொள்ளாச்சி; ”பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்க இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்,” என, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 90,124 மக்கள் தொகை உள்ளது.

தினமும், அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து, ஒரு நாளுக்கு, 14 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.

மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, 11 மில்லியன் லிட்டர் தினசரி வினியோகிக்கப்படுகிறது. ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

நகரில், 17,650 குடிநீர் வீட்டு இணைப்புகளும், 198 பொது இணைப்புகளும் உள்ளன. இது மட்டுமின்றி, மற்ற பயன்பாட்டுக்கு தனியாக போர்வெல் தண்ணீரும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நகராட்சியில், 7,000 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.

குடிநீர் இணைப்பு மற்றும் பாதாளச்சாக்கடை திட்டத்தில், இணைப்பு பெறாதோர் நேரடியாக நகராட்சியிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகார் வந்தால் நடவடிக்கை நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:தமிழக அரசு, நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், நகரில், பாதாள சாக்கடை திட்டம், 170.226 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. அதில், மொத்தம், 20 ஆயிரம் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகளும் நடக்கின்றன.

தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் பொள்ளாச்சி நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் உபவிதிகளின் படி, வீட்டில் சாக்கடைகள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவறைகள் முதலிய சுகாதாரத்துக்கு உகந்த வகையில் அமைப்புகள் ஏற்படுத்தவும், வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இணைப்புகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. இதற்காக இணைப்புவழங்கும்பணிகள் நடைபெற்ற வருகின்றன.

இணைப்புகள் இல்லாத குடியிருப்புகள் கட்டாயம் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள், சொத்துவரி நகல், ஆதார் நகலினை பெற்றுக்கொண்டு நகராட்சி அலுவலகத்தை அணுகி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் பெறுவதற்கு நகராட்சியில் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரரை கொண்டு மட்டுமே பணி செய்ய வேண்டும்.

குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு நகராட்சியில் அனுமதி பெறாத தனிநபர் அல்லது இடைத்தரகர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

பொதுமக்களிடம் இருந்து தனிநபர்கள், இடைத்தரகர்கள் மீது புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.