பெ.நா.பாளையம்; துடியலூர், வெள்ளக்கிணறு வட்டாரத்தில் புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய போலீஸ், வேடிக்கை பார்ப்பது விபரீத சம்பவங்கள் நடக்க வாய்ப்பாக அமையும் என, பொதுமக்கள் குமுறுகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,’ துடியலூர் வட்டாரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்களை சுற்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை உத்தரவு இருந்தும், அவை இப்பகுதியில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்ப்பதால், புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மதுபான கடைகளில்,18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என, சட்டம் இருந்தும், சிறுவர்களுக்கு மது தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. துடியலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மது கடைகளும், 24 மணி நேரமும் இயங்குகின்றன. கேரளாவில் இருந்து ஆனைகட்டி வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதை அவ்வப்போது தடாகம் போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டாலும், முழுமையாக தடுக்க முடியவில்லை’ என்றனர்.இது குறித்து, துடியலூர் போலீசார் கூறுகையில்,’ புகையிலை உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கிய இடங்களில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் புகையிலை பொருட்கள் விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது.
புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது’ என்றனர்.
Leave a Reply