ஈமுகோழி, இருடியம் எல்லாம் இப்ப இல்ல.. கோவையில் டிரெண்டாகும் புதுவித மோசடி.. தட்டி தூக்கிய போலீஸ்

கோவை: ஈமு கோழி, இருடியம், மண்ணுளி பாம்பு, எம்.எல்.எம் நிறுவனங்கள் என்று கோவையில் ஏராளமான நூதன மோசடிகள் நடைபெறும். அந்த வகையில் டெல்லி கிரைம் பிராஞ்ச்சில் இருந்து வந்துள்ளேன் என்று வயதான பெண்ணை மிரட்டி பணம் பறிக்க பார்த்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


கார்டு மேல 16 நம்பர்.. டிஜிட்டல் அரெஸ்ட் என்று சைபர் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபட்டு வந்த போலி அதிகாரிகள் இப்போது வயதான நபர்களை குறிவைத்து நேரடியாக வீட்டுக்கே வரத்தொடங்கியுள்ளனர். அப்படி வீட்டுக்கே வந்து மிரட்டிய போலி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இவரின் மனைவி பியூலா அனமரியால். இவர்களின் வீட்டுக்கு கடந்த வாரம் அகஸ்டின் பிஜூ என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை டெல்லி கிரைம் பிராஞ்ச் அதிகாரி என்று அறிமுகமாகியுள்ளார். இவர் எதற்கு நம் வீட்டுக்கு வந்தார் என்று அவர்களுக்கு புரியவில்லை. “உங்கள் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.” என்று கூறி அதிர வைத்துள்ளார். மேலும், “உங்களது பெயரில் அனுமதி இல்லாமல் அணு குண்டுகள் தயாரிக்கும் வேதிப்பொருட்களை இரண்டு முறை இலங்கை நாட்டுக்கு அனுப்பியுள்ளீர்கள். இதற்காக சட்ட விரோத பரிவர்த்தனையாக உங்கள் வங்கி கணக்குக்கு மூன்று முறை பணம் வந்துள்ளது. 10 நாட்களில் நீங்கள் மேலும் சில அணு குண்டு தயாரிக்கும் வேதி பொருட்களை அனுப்ப திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உங்களை கைது செய்யவுள்ளோம். அடுத்த 15 வருடங்களுக்கு நீங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.” என்று பியூலாவிடம் கூறியுள்ளார்.

பயந்து போன பியூலா மற்றும் இமானுவேல் இதுகுறித்து தங்களின் உறவினரான வழக்கறிஞர் ஜே.டி.சாக்ரடீஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சாக்ரடீஸ் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் விசாரித்தபோது, “அப்படி ஒரு அதிகாரி வந்திருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லையே.” என்று கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர், சாக்ரடீஸ் ஆகியோர் இமானுவேல் வீட்டுக்கு சென்றுள்ளனர். “உள்ளூர் காவல் நிலையத்தில் சொல்லாமல் இங்கே எப்படி விசாரணைக்கு வந்தீர்கள்.” என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதை எதிர்பார்க்காத அவர் டிஜிபி பெயரில் இருந்த ஒரு கடிதத்தை காட்டி, “இவர்கள் தவறு செய்யவில்லை. இவர்கள் பெயரில் தவறு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லத்தான் வந்தேன்.” என்று சமாளித்துள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவரின் அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அதில், ‘NATIONAL CRIME INTELLIGENCE AGENCY NON GOVERNMENTAL ORGANISATION’ என்று குறிப்பிட்டிருந்தது. அவரிடம் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில் அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறை அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “அகஸ்டின் பிஜூ கேரளாவைச் சேர்ந்தவர். கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். அந்த நபர் ஒரு என்ஜிஓ. பதிவு செய்யப்பட்ட ஒரு தன்னார்வு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் இதே பாணியில் டெல்லி கிரைம் பிராஞ்ச் அதிகாரி என்று சொல்லி பலரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார். அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் சிறையில் அடைத்துள்ளோம். இதுபோன்ற நபர்கள் யாரேனும் வந்தால் மக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும்.” என்றனர்.