பொள்ளாச்சி; ‘ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவதால் பொருளாதாரம் மேம்படும்,’ என, தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவது குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவை வேளாண் பல்கலையின், வேளாண் பொருளாதாரம், வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம் சார்பில், புவிசார் குறியீடு பெறுவதற்கான முறைகள், பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது.
கோவை வேளாண் பல்கலை வேளாண் பொருளாதாரம் பேராசிரியர் அஞ்சுகம் வரவேற்றார். வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மைய இயக்குனர் சுரேஷ்குமார், தோட்டக்கலைத்துறை டீன் ஐரீன் வேதமோனி மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் அதிகாரிகள் பங்கேற்று பேசினர்.
சென்னை புவிசார் குறியீடு துணை பதிவாளர் சிவக்குமார் பேசியதாவது:
பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. தற்போது ஒவ்வொரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறுவதால், அதன் பொருளாதாரம், சட்டப்பூர்வ பாதுகாப்பு மேம்படும். குறியீடு பெற்ற பொருட்களை பாதுகாத்து, போலிகளை தடுக்க முடியும்.
சந்தைப்படுத்தும் போது, பொருளாதாரம் மேம்படும்.சந்தையில் வேறு பொருட்களில் இருந்து தனித்துவத்துடன் அடையாளப்படுத்த முடியும். பொள்ளாச்சி தேங்காய் புகழ் பெற்றுள்ளது. இதற்குரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
கோவை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
பொள்ளாச்சி தென்னை என்றாலே மவுசு உள்ளது.பொள்ளாச்சி பகுதியில் தென்னைக்கு கற்பக விருட்சம் என பெயர் உண்டு. தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
புவிசார் குறியீடு பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து, துணை பதிவாளர் வாயிலாக விளக்கப்பட்டது. தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் தலைவர், இயக்குனர்களிடம் புவிசார் குறியீடு பெறுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. தென்னைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முதற்கட்டமாக அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பல்கலையுடன் தொடர்பு கொண்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும். புவிசார் குறியீடு பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply