வால்பாறை ரிசார்ட்டில் நுழைந்த யானைகள்: சுற்றுலா பயணியர் ஓட்டம் கூடலுாரில் வனஊழியர்களை விரட்டின

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி – வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.நேற்று முன் தினம் அதிகாலை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள தனியார் ரிசார்ட்டுக்கு வந்தயானைகள் கூட்டம், முன்புறத்தில் சுற்றுலாபயணியர் அமரும் இருக்கை மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தியது. துாங்கி கொண்டிருந்த சுற்றுலாபயணியர் யானைகளை கண்டு அலறியடித்து கூச்சலிட்டனர். அதன்பின் ரிசார்ட் ஊழியர்கள், சுற்றுலா பயணியர்இணைந்து யானைகளை உடனடியாக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

* கூடலூர் மூன்றாவது மைல் பகுதியில் நுழைந்த யானையை வன ஊழியர்கள் விரட்டினர். அப்போது யானை திடீரென திரும்பி வந்து அவர்களை விரட்டியது. ஓடி உயிர் தப்பினர்.ஆக்ரோசமாக வந்த யானை, அங்குள்ள கடையின் மேற்கூரையை சேதப்படுத்தி, இந்நிலையில், இதன் சி.சி.டி.வி., வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேவராயபுரம் புள்ளாகவுண்டன்புதுார், அரங்கநாயகம் பில்டிங் பகுதியில், நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒற்றை காட்டு யானை, வனப்பகுதியைவிட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், 2 ஜீப்களில் வந்து, ஒற்றை யானையை விரட்டினர். இதில், கோபமடைந்த காட்டு யானை, துரத்தி வந்து, வனத்துறையினரின் ஜீப்பை நேருக்கு நேர் முட்டி தாக்கியது.

இதில், ஜீப் கண்ணாடி உடைந்தது. அதன்பின், ஜீப் பின்னால் சென்றதும், காட்டு யானை, திரும்பி வனப்பகுதிக்குள் சென்றது.

– நிருபர் குழு –