வால்பாறை; சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.வால்பாறையில், கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ததால், ஜூன் 26ம் தேதி 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை நிரம்பியது.

இதனையடுத்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்ததால், சோலையாறு அணை நிரம்பி வழிந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,850 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 5,192 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், பி.ஏ.பி.,, பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு – 28, பரம்பிக்குளம் – 9, ஆழியாறு – 8, வால்பாறை – 28, மேல்நீராறு – 38, கீழ்நீராறு – 20, காடம்பாறை – 6, மேல்ஆழியாறு – 7, சர்க்கார்பதி – 12, வேட்டைக்காரன்புதுார் – 8, மணக்கடவு – 15, துாணக்கடவு – 15, பெருவாரிப்பள்ளம் – 12, நவமலை – 7, பொள்ளாச்சி – 5 என்ற அளவில் மழை பெய்தது.
Leave a Reply