கவுசிகா நதியில் விடிய விடிய மண் கடத்தறாங்க! விவசாயிகள் குற்றச்சாட்டு

பெரியநாயக்கன்பாளையம் அருகே குருடி மலையில் துவங்கும் கவுசிகா நதி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அன்னுார், சூலுார் ஒன்றியங்களை கடந்து திருப்பூர் மாவட்டம் செல்கிறது.இந்த பள்ளத்தில் மழைக் காலங்களில் அதிக அளவில் நீர் செல்கிறது. மற்ற சமயங்களில் வெறும் பாதையாக உள்ளது. இதை பயன்படுத்தி கள்ளிப்பாளையம் ஊராட்சி எல்லையில், பச்சாபாளையம் ஊராட்சி துவங்குமிடத்தில் கவுசிகா நதி பள்ளத்தில் இரவு துவங்கி, விடிய, விடிய மண் கடத்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது :

இரவு துவங்கி, அதிகாலை வரை, இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நான்கு டிப்பர் லாரிகளை பயன்படுத்தி மண் எடுக்கின்றனர்.எந்த அனுமதியும் பெறுவதில்லை. பகலில் மண் எடுப்பதில்லை. இதனால் நதியின் அகலம் 200 அடியாக விரிந்து விட்டது. ஆழம் 40 அடி வரை சென்று விட்டது. தற்போது கவுசிகா நதி பாதையில் அக்ரஹார சாமக்குளம், காளிங்கராயன்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில், சீரமைப்பு பணி செய்யப்பட்டு குளங்களுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இங்கு மழை நீர் செல்லும் பள்ளத்தை அகலப்படுத்தி விட்டனர். இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் மழை நீர் புகும் வாய்ப்புள்ளது.

பள்ளத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. நதியை ஒட்டி உள்ள மரங்கள் அகற்றப்பட்டுள்ளன

இதுகுறித்து வருவாய் துறைக்கு ஏற்கனவே பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் உடனடியாக சோதனை நடத்தி, மண் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.