நீர்த்தொட்டி மானியத் திட்ட மாற்றம் பயனில்லை! சரியில்லை என விவசாயிகள் புகார்

விவசாயிகளுக்கு, நிலத்தடி நீர்த்தொட்டி அமைப்பதற்கான துணை நீர் மேலாண்மை நடவடிக்கை திட்ட மானியத்தை நிறுத்தி விட்டு, தேசிய தோட்டக்கலை இயக்க மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, எவ்வித பயனையும் அளிக்காது. இத்திட்டம் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்துக்காக ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றை நேரடியாக சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்த முடியாது.

எனவே, அவற்றை நீர்த்தொட்டி அல்லது நீர்க் குட்டையில் சேமித்து அதிலிருந்து சொட்டுநீர் பாசனம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வகையில், துணை நீர் மேலாண்மை நடவடிக்கை (எஸ்.டபிள்யூ.எம்.ஏ.,) திட்டத்தில், நிலத்தடி நீர்த்தொட்டி கட்ட மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்தில், தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம், குழாய் அமைக்க ரூ.10 ஆயிரம், பம்ப் செட் பொருத்த ரூ.15 ஆயிரம் என, மொத்தம் ரூ. 65 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு தொட்டி அமைக்க ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என்ற அடிப்படையில், அதிகபட்சம் 114 கனமீட்டருக்கு மானியம் வழங்கப்பட்டது.

திட்டம் மாற்றம் இரு ஆண்டுகளாக இத்திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய தோட்டக்கலை இயக்க நீர் சேகரிப்புக் குட்டை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு கனமீட்டருக்கு அதிகபட்ச செலவினமாக ரூ.125 கணக்கிட்டு, அதில் 50 சதவீத மானியமாக ரூ.62.50 மட்டும் வழங்கப்படுகிறது.இந்தத் தொட்டியை, பாலித்தீன், சிமென்ட் கொண்டு கட்டலாம்; களிமண்ணிலும் கட்டலாம். களிமண்ணில் கட்ட மானியத்தில் 30 சதவீதம் குறைவாக வழங்கப்படும்.இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் வேளாண் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சிமென்ட் தொட்டி கட்ட கன மீட்டருக்கு ரூ.1,200க்கு மேல் ஆகும் நிலையில், ஏற்கனவே வழங்கிய ரூ.350 மானியமே போதாது, உயர்த்த வேண்டும் என கோரி வந்தோம். தற்போது, அந்த மானியத்தில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.

பாலித்தீன் தொட்டிக்கும், சிமென்ட் தொட்டிக்கும் ஒரே அளவு மானியம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இத்தொகைக்குகுழி கூட தோண்ட முடியாது.

பாலித்தீன் தொட்டி நிரந்தர தீர்வல்ல. வெயில், நாய், எலி, காட்டுப்பன்றி, மயில் போன்றவற்றால் விரைவில் சேதமடைந்து விடும். நான்கு ஆண்டுகளுக்குக் கூட தாக்குப்பிடிக்காது.

தற்போது கிடைக்கும் மும்முனை மின்சார அடிப்படையில், 12 லட்சம் லிட்டர் நீரைத் தேக்க, மணிக்கு ஒரு லட்சம் லிட்டர் ஆழ்குழாயில் எடுக்க வேண்டும். நடைமுறையில், ஒரு இஞ்ச் நீர் என்ற கணக்கில் மணிக்கு 5,000 லிட்டர் தான் கிடைக்கும்.

எனவே, இத்திட்டத்தின் விதிமுறைகளை மாற்றி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ஏற்ப, தொட்டியின் அளவை மாற்றி, கன மீட்டருக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.