கோவை, : ‘குருடம்பாளையத்தில் இருந்து சத்தி வரை, விவசாய நிலங்களை அழிக்காமல், தற்போதுள்ள ரோட்டை விஸ்தரிக்க வேண்டும்’ என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை அருகே குருடம்பாளையத்தில் இருந்து சத்தி வரை, 92.213 கி.மீ., துாரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு, 926 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.ஆட்பேனை இருப்பின், 18ம் தேதிக்குள்(இன்று) தெரிவிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், அதை தவிர்த்து, தற்போது பயன்பாட்டில் உள்ள ரோட்டை விஸ்தரிக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயி நடராஜ் கூறுகையில், ”கோவை – பொள்ளாச்சி மற்றும் சத்தி – ஈரோடு ரோடுகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தாமல் அகலப்படுத்தப்பட்டன. தற்போது அவிநாசி – மேட்டுப்பாளையம் ரோடும் இதேபோல் அகலப்படுத்தும் பணி துவக்கப்பட்டு இருக்கிறது. குருடம்பாளையம் – சத்தி வரையிலான ரோட்டுக்கு மட்டும், ஏன் விளைநிலம் கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவிடம் கேட்ட போது, ”நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை இருந்தால், 18ம் தேதி வரை தரலாம். விவசாயிகள் கொடுத்துள்ள ஆட்சேபனைகள், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டு, அத்துறையின் கருத்து கேட்டறியப்படும்,” என்றார்.
‘விளைநிலங்கள் எதற்கு?’
கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி கூறுகையில், ”தற்போதுள்ள ரோடு, 120 – 130 அடிக்கு இருக்கிறது; அதையே விரிவாக்கம் செய்யலாம்; தேவைப்பட்டால் உயர்மட்ட பாலம் கட்டலாம். ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பூமியை அழித்து ரோடு போட வேண்டுமா. மாற்று வழியில்லாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தலாம். ரோடு இருக்கிறது; விரிவாக்கம் செய்ய இடம் இருக்கிறது. அவ்வாறு இடம் இருந்தும் விளைநிலங்களை எதற்காக கையகப்படுத்த வேண்டும்,” என்று கேள்வி எழுப்பினார்.
வளைவுகள் அதிகம் தேவை அதிக நிலம்
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, ‘தற்போதுள்ள ரோட்டில் வளைவுகள் அதிகமாக இருக்கின்றன. அதை நேர் செய்ய வேண்டுமெனில், அதிக நிலம் கையகப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக, புறவழிச்சாலை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. ரோடு வந்தால் நகரம் வளர்ச்சி அடையும்.
ஏற்கனவே வழித்தடம் ஆய்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பது குறைவு; புறவழிச்சாலை தேவை என கூறுவோர் அதிகம். மத்திய – மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்தும் திட்டம்; இரு அரசுகளும் இணைந்தே முடிவெடுக்க வேண்டும்’ என்றனர்.
Leave a Reply