கோவை: கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் கண்ணாயால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை கோவை மாநகர் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
கோவையைப் பொறுத்தவரை கடந்த 2006 ஆம் ஆண்டு, 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தெரு நாய்களின் தொல்லை தற்போது ஒரு லட்சத்தை தாண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோவையில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த 2006 ஆம் ஆண்டு சீரநாயக்கன்பாளையத்தில் நாய்கள் கருத்தடை மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் நாய்கள் கருத்தடை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. ஆனாலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து தான் வருகிறது. கோவை மாநகரப் பொருத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளில் பாதிக்கப்பட்டோர் ஒரு எண்ணிக்கை 10,000 கடந்து இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோவை சுங்கம் ரவுண்டானா, ஆலங்குளம், உக்கடம், போரூர், பைபாஸ், உக்கடம், ஆத்து பாலம், ஒப்பணக்கார வீதி, துடியலூர் சாலை, ராஜ வீதி, ஆர்எஸ் புரம், காந்தி பார்க் ஆகிய பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் கடியால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வது போல தெரியவில்லை.இந்நிலையில், கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் கண்ணாயால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர். இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.இதனிடையே இன்று பிற்பகல் அவர் திடீரென அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இளைஞர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ வெளியாக பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply