கோவை; பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, துாய்மை பணியாளர்களின் தள்ளு வண்டிகளில், ஒலிப்பெருக்கிகள் பொருத்தி அபராத எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, ‘இ-வேஸ்ட்’ என, தினமும், 1,250 டன் வரை குப்பை சேகரமாகிறது. வெள்ளலுார் குப்பை கிடங்கில் இக்குப்பை மலை போல் தேங்கியதால், அப்பகுதி மக்கள் சுகாதார பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

குப்பை தரம் பிரிக்காமல் தரப்படுவதால், குப்பை மேலாண்மையில் சிக்கலும், தாமதமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வீடுதோறும் குப்பையை தரம் பிரித்து துாய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். இந்த பணியில் 4,650 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும், தரம் பிரிக்காமல் தருவது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது போன்ற அலட்சியம் தொடர்கிறது.
இதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் அபராத நடவடிக்கை எடுத்துள்ளது. குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள், வாகனங்களில் ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
‘குப்பையை சரியாக தரம் பிரித்து தர வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மீறி குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்’ என, ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில், ‘100 வார்டுகளிலும் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். மீறி குப்பை கொட்டினால், ரூ.500 முதல் அபராதம் விதிக்க, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.
Leave a Reply