கோவை; கோவை மீன் மார்க்கெட்டுக்கு, தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளம், ராமேஸ்வரம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில இடங்களில் இருந்து, மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தினமும், 50 டன்கள் முதல் 60 டன்கள் வரை வரத்துள்ளது.இந்நிலையில், மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று முதல் ஜூன், 14ம் தேதி வரை, மீனவர்கள் கிழக்கு கடற்கரை, வங்கக் கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு, கடல் மீன்கள் வரத்து குறையும். குளத்து மீன்கள் மற்றும் அணைக்கட்டுகளில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும் விற்பனைக்கு வரும். இதனால் மீன் விலை உயர வாய்ப்பு இருப்பதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வஞ்சரம் (பெரியது) 1300 ரூபாய்க்கும், சாலமன் 800 ரூபாய்க்கும், கருப்பு வாவல் 650 ரூபாய்க்கும், ஊளி, தேங்கு பாறை மற்றும் கிளிமீன், 450, ரூபாய்க்கும், இறால் 480 ரூபாய்க்கும், மதன கொடுவா, மடவா, நகரை, கடல்புறா, மஞ்சள் பாறை மற்றும் கேரள கறிமீன் ஆகிய மீன்கள், கிலோ 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.உக்கடம் லாரிப்பேட்டை மீன் மார்க்கெட் மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் காதர் கூறுகையில், ”கோவை மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை, மீன் வரத்து குறைய வாய்ப்பில்லை. கேரளம், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. விலை கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எல்லா மீன்களும் விலை உயராது. வஞ்சரம் உள்ளிட்ட சில மீன்களின் விலை அதிகரிக்கும்,” என்றார்.
Leave a Reply