கோவை : தென் மாவட்டங்களிகளில் கனமழை பெய்து வருவதால் உதிரிப்பூக்கள் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்துள்ளது.கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல், தேனி மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதிரிப்பூக்கள் விற்பனை கொண்டு வரப்படுகின்றன. தினமும், 10 டன் முதல் 12 டன் வரை உதிரிப்பூக்கள் விற்பனைக்கு வருகிறது. முகூர்த்தம் மற்றும் விசேஷ காலங்களில் இந்த அளவு அதிக்கும்.ஆடி மாதம் என்பதால் ஆடி, வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோம்பு என, விசேஷ பூஜைகள், கோவில்களில் வழிபாடுகள் நடப்பது வழக்கம். இதனால், பூஜைக்கு பூக்களின் தேவை அதிகரிக்கும்.

மல்லி, முல்லை, சாதி மல்லி உள்ளிட்ட பூக்கள் மதுரை, தேனி, நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருவதால் மல்லி, சாதி மல்லி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கிலோ 600 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மலர் வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் துரை கூறுகையில், ”ஆடியில் பூ விற்பனை நன்றாக இருக்கும். முகூர்த்தம் விசேஷம் இருக்காது என்றாலும் கோவில் வழிபாடு அதிகம் இருக்கும். இந்த மாதம் வந்த மூன்று ஆடி வெள்ளியும், விற்பனை சிறப்பாக இருந்தது. இடையில் தென் மாவட்ட பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பூ வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் ஆவணி என்பதால், கல்யாண முகூர்த்தம் அதிகம் இருக்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்கு உதிரிப்பூக்கள் விலை குறை யாது,” என்றார்.
Leave a Reply