நேரு ஸ்டேடியத்தில் சுகாதாரமற்ற சூழலால் ‘உவ்வே’.. அதிருப்தியில் வெளிமாநில வீரர்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் வெளிமாநில வீரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ள நிலையில் போதிய நிதி ஒதுக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Latest Tamil News

கோவை நேரு ஸ்டேடியத்தில் கால் பந்து மட்டுமின்றி தடகள போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த, 2023ல், ரூ.6.55 கோடியில் ‘சிந்தடிக் டிராக்’ அமைக்கப்பட்டது.சென்னைக்கு அடுத்து வளர்ந்த நகரான கோவையில் தடகளம், கூடைப்பந்து உள்ளிட்ட சில விளையாட்டுகளில் மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தினால் இன்னும் பல பதக்கங்களை கோவை வீரர்களால் குவிக்க முடியும்.

நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்த தினமும் ரூ.3,000, ரூ.5,000 என சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர, மின்சாரம், பராமரிப்புக்கென்று தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதற்கேற்ப பராமரிப்பு வசதிகள் செய்து தரப்படாததால் வீரர்கள் சுகாதார ரீதியான பாதிப்புகளை சந்தித்து, போட்டியில் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகிறது. ஸ்டேடியத்தில் மூன்று கழிவறைகள் உள்ளன.

இவை பராமரிப்பற்று மோசமான நிலையில் உள்ளது. கழிவுநீர் செல்ல போதிய வசதி இல்லாது, ‘ரிவர்ஸ்’ எடுக்கிறது. வெளியே கூடைப்பந்து மைதானம் செல்லும் வழியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதுடன், சிறுநீர் கழிப்பது அதிருப்திஅடைய வைக்கிறது.

மாநகராட்சி மைதானத்தில் இருக்கும் கழிவறையும் பராமரிப்பின்றி உள்ளது. தற்போது நடந்து வரும் ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநில வீரர்கள் இந்த அவலத்தை பார்த்து அதிருப் தியடைகின்றனர் .

கண்டுகொள்ளாத மாநகராட்சி!

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,’தற்போதுள்ள கழிவறைகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதை புனரமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் நிதி கோரியுள்ளோம். நிதி வந்தவுடன் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும். ஸ்டேடியம் வெளியே இரு பெரிய குப்பை தொட்டிகள் வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் பல மாதங்களாக கேட்கிறோம்; இதுவரை வைக்கவில்லை’ என்றனர்.

கடந்த மாத துவக்கத்தில் ஸ்டேடியத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பவன்குமாரின் அறிவுறுத்தலின் பேரில், குப்பை தொட்டிகள் தேவை, ஸ்டேடியம் சுற்றி பாதாள சாக்கடை அடைப்பு நீக்குதல் உள்ளிட்ட தேவைகள் அடங்கிய கடிதம் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இப்பிரச்னைகளுக்கு அப்போதே தீர்வு கிடைத்திருந்தால், நமது சுகாதார அவலம் வெளிமாநில வீரர்கள் வரை சென்றிருக்காது. எனவே, புனரமைப்பு பணிகளை தாமதமின்றி மேற்கொள்ளவது காலத்தின் கட்டாயம்.