ஊட்டிக்கு செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் தவிப்பு; இ–பாஸ் விழிப்புணர்வு இல்லாததால் சிக்கல்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லார் இ -பாஸ் சோதனை சாவடி வழியாக தினமும் 2,000 சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு செல்கின்றன. வெளிமாநிலத்தவர்கள் இ–பாஸ் விழிப்புணர்வு இன்றி வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Latest Tamil News

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள், ரயில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சரக்கு வாகனங்களில் செல்வோருக்கு இ-பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 12 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.மேட்டுப்பாளையம் அருகே கல்லார் தூரிப்பாலம் மற்றும் கோத்தகிரி சாலையில் வனத்துறை மரக்கிடங்கு அருகே என மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடங்களில், இ- பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு வரும் இ- பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் பெரும்பாலும் இ-பாஸ் பற்றி தெரிந்திருக்க, வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் இ-பாஸ் பற்றி அறியாமல் இருப்பதால், இங்கு வந்து சிக்கி தவிக்கின்றனர். சர்வர் கோளாறு, வருவாய் துறை அதிகாரிகள் பற்றாக்குறை என இ-பாஸ் பெற அவர்கள் கால் கடுக்க காத்திருக்கின்றனர். கல்லார் சோதனை சாவடியில் மட்டும் தினமும் 2,000 வாகனங்கள் இ -பாஸ் காண்பித்து செல்கின்றன. கோத்தகிரி சோதனை சாவடி வழியாக 500 வாகனங்கள் செல்கின்றன.

இதுகுறித்து,சுற்றுலா பயணிகள் கூறுகையில், பள்ளிகளில் கோடை விடுமுறை விட்டதும் கூட்டம் அலைமோதும். மலர் கண்காட்சி, மே மாதம் சீசன் என எப்போதும் தமிழகத்தில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டிக்கு வருவார்கள். தினமும் 10,000 இ -பாஸ், சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் 20,000 என்று எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து, நீலகிரி மாவட்ட வருவாய் துறையினர் கூறுகையில், நீலகிரி மாவட்டம் அருகில் உள்ள மைசூர், வயநாடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுக்கு இ-பாஸ் தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைதளங்களிலும் இ-பாஸ் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறோம், என்றனர்.—