நீர் நிலைகளை மராமத்து செய்யாவிட்டால் பேராபத்து! முன்னாள் துணை வேந்தர் எச்சரிக்கை

கோவை : ‘தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை ஏற்படும். காட்மியம், ஈயம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்கள் கலந்து நீர் மாசடைந்து விடும். 9 மாவட்டங்களில் ஆர்சனிக் மாசுபாடு அதிகமாக இருக்கும். 27 மாவட்டங்களில் நீரில், நைட்ரேட் அளவு அதிகரித்துக் காணப்படும். அடுத்த, 20 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்’ என, நிதி ஆயோக் எச்சரித்திருக்கிறது.

Latest Tamil News

இதுதொடர்பாக, வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது: முன்பு ஆண்டுக்கு 67 முதல் 72 நாட்கள் வரை, மழைப்பொழிவு இருக்கும். தற்போது, 30-32 நாட்களில் மொத்த மழையும் பொழிந்து விடுகிறது. இதனால், நிலம் ஈரமடைந்து, நிலத்துக்குள் நீர் ஈர்க்கப்படுவது குறைந்து, வழிந்தோடி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில்லை. அதேசமயம் நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குடிநீர், வேளாண்மை, தொழில் என அனைத்திலும் அதிக நீரைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான சமயங்களில் வீணடிக்கிறோம். வேளாண்மையில் அதிக நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்கிறோம். இதைத் தவிர்த்து காய்கறி பயிர் செய்து, பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

தொழில்துறையில், ஒரு கிலோ ஜவுளி உற்பத்தி செய்ய, 52 லிட்டர் மறை நீர் தேவைப்படுகிறது. தோல் தொழிற்சாலைகளால் நீர் மாசுபடுகிறது. ஆறுகள் மாசடைகின்றன. கழிவுநீர் சுத்திகரிக்கவும், திடக்கழிவு மேலாண்மைக்கும் அரசுத் துறைகள் கட்டணம் வசூலிக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தினாலே, நீர் மாசுபாடு பெருமளவு தடுக்கப்படும்.

முற்காலத்தில் இருந்ததுபோல, குடிமராமத்து பணிகளைத் தொடர்ந்தால், 25 முதல் 33 சதவீதம் வரை, நீரில் தற்சார்பை எட்டலாம். நிலத்தடி நீரைச் சேமிக்கலாம். ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும். தமிழகத்துக்கு இரு பருவ மழை உண்டு. இருக்கும் நீரை முறையாகப் பயன்படுத்த அரசும் மக்களும் திட்டமிட வேண்டும்.

சென்னை மீனம்பாக்கத்தில் ‘நிலசீரமைப்புத் துறை’ என்கிற மத்திய அரசின் துறை உள்ளது. தமிழக புவியமைப்பில் எங்கெங்கு மலைசார்ந்து மழை நீர் சேகரிக்கலாம் என்ற கருத்துரு அத்துறை வசம் உள்ளது. அதன்படி, வாய்ப்பு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். நீர் நிலைகளை குடிமராமத்து செய்து பராமரிக்காவிட்டால், பேராபத்து ஏற்படும். நீர்நிலைகளை காப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; மக்களின் பொறுப்பும் சேர்ந்தது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கத்தில் ‘நிலசீரமைப்புத் துறை’ என்கிற மத்திய அரசின் துறை உள்ளது. தமிழக புவியமைப்பில் எங்கெங்கு மலைசார்ந்து மழை நீர் சேகரிக்கலாம் என்ற கருத்துரு அத்துறை வசம் உள்ளது. அதன்படி, வாய்ப்பு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். நீர் நிலைகளை குடிமராமத்து செய்து பராமரிக்காவிட்டால், பேராபத்து ஏற்படும்.