பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை பள்ளிகளில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுார் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் நாகராஜ், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:
உலக புத்தக நாளானது, பள்ளியில் ஏழு ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாடுவதற்கு முன்பே, பள்ளியின் நுாலகத்துக்காக சமூக வலைதளங்கள் வாயிலாக புத்தக தானம் கேட்கப்படுகிறது.
இந்த செய்தியை பார்த்து பல கொடையாளர்கள், கல்வியாளர்கள், பள்ளியின் நுாலகத்துக்கு புத்தகங்களை தானமாக வழங்குகின்றனர்.
பெறப்பட்ட புத்தகங்களை பள்ளியின் மைதானத்தில் வரிசையாக அடுக்கி வைத்து, குழந்தைகள் விரும்புகின்ற புத்தகங்களை எடுத்து ஒரு மணி நேரம் வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.அதன்பின், குழந்தைகள் வாசித்த புத்தகங்கள் குறித்து குழந்தைகளோடு கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.
வாசித்தலால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வாசித்தலால் மனதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கப்படுகிறது.வாசித்தல், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு மிகச்சிறந்த வழியாகும்.
இவ்வாறு, அவர் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேவகி செய்திருந்தார்.
* பொள்ளாச்சி அருகே பில்சின்னாம்பாளையத்தில், அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தில் உலக புத்தக நாள் கொண்டாடப்பட்டது. அமைப்பின் நிறுவனர் அம்சபிரியா தலைமை வகித்தார். அமைப்பாளர் ஹரிப்பிரியா வரவேற்றார்.
புத்தகம் எனும் தோழமை என்ற தலைப்பில் கவிஞர் செந்திரு பேசுகையில், ”புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் அல்ல. அவை நமக்கு வழிகாட்டும் நல்ல தோழமைகள். நல்ல நுால் வாழ்நாளெல்லாம் நெறிப்படுத்தும். அன்பையும், மனிதநேயத்தையும் புத்தகங்கள் கற்றுக்கொடுக்கின்றன,” என்றார்,.
எழுத்தாளர் பாலமுருகன் கதை கூறுதல் நிகழ்வாக, ‘பழைய பாட்டியும், புதிய வடையும்’ என்ற முருகேஷ் எழுதிய சிறார் கதை நுாலை அறிமுகப்படுத்தி பேசினார்.
சேலத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி கமநிதா எழுதிய கசங்கிய மரம் எனும் கவிதை நுாலை அம்சபிரியா அறிமுகப்படுத்தி பேசினார். காளிங்கராஜ் திருக்குறள் வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். கவிஞர் காளிமுத்து நன்றி கூறினார்.
* பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி அரசுப்பள்ளியில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை வலியுறுத்தினர்.
Leave a Reply