கோவை: தாயின் சொத்தை அபகரித்த மகன் மீது வழக்கு பதிய போலீசாருக்கு, கோர்ட் உத்தரவிட்டது.கோவை, தாளியூர் அருகேயுள்ள மேற்கு சித்திரை சாவடி, செட்டி தேப்பு வயல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி,69. இவரது கணவர் சுப்பிரமணியன் இறப்பதற்கு முன், அவருக்கு சொந்தமான தொண்டாமுத்துாரிலுள்ள 49 சென்ட் நிலத்தை லட்சுமி பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்தார்.இவரது மகன் சண்முகராஜ்,38, மனைவி வனிதாமணியுடன்,35, காளம்பாளையத்தில் வசித்து வருகிறார். தந்தை சுப்பிரமணியன் இறந்த பிறகு, தாய் லட்சுமியை கவனித்து கொள்வதாக கூறி, அவரது பெயரிலுள்ள, 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 49 சென்ட் நிலத்தை, கடந்த 2022, சண்முகராஜ் பெயரில் தான பத்திரம் எழுதி வாங்கினார். அதன்பிறகு, தாய் லட்சுமியை சரியாக கவனிக்கவில்லை. இதனால் சண்முகராஜிடம் எழுதி கொடுத்த நிலத்தை திருப்பி தருமாறு கேட்ட போது மறுத்தார்.
இந்நிலையில், தென்னம்பாளையம், புதுப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் 35, என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு நிலத்தை சண்முகராஜ் அடமானம் வைத்தார். இதையறிந்த லட்சுமி இடத்தை மீட்டு தருமாறு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோவை ஜே.எம்:6 கோர்ட்டில் தனிப்புகார் அளித்தார். ஆனால், சிவில் விவகாரம் என்று அவரது புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், சென்னை ஐகோர்ட்டில், சண்முகராஜ், மனைவி வனிதாமணி, மோகன்ராஜ் மீது குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி பிறப்பித்த உத்தரவில், ”எதிர்மனுதாரர்கள் மூவர் மீதும், தொண்டாமுத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் அதன் அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 
						


 
							 
						




Leave a Reply