குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால் ஆரோக்கியத்தை பாருங்க !  மார்பக புற்றுநோய் உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ 

தினமலர் நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், ‘நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்’ என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது. ஏராளமான வாசகர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். டாக்டர் எழில்செல்வன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கேள்வி: ‘பயாப்சி’ செய்வதால் புற்றுநோய் பரவுவதாக கூறுகின்றார்களே ?பதில்: முற்றிலும் தவறானது. மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிய முதலில் மேமோகிராம் எனும் பரிசோதனை செய்வோம். அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் இரண்டாவதாக பயாப்சி செய்யப்படும். இது, புற்றுநோய் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும், அதன் பரவல் தன்மை அறியவும் செய்யப்படுகிறது. இதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப்படுகிறது. பயம் இல்லாமல் பயாப்சி செய்துகொள்ளலாம்; இதனால், புற்றுநோய் பரவாது.

கேள்வி: என் குடும்பத்தில் மார்பக புற்றுநோய்க்கான எந்த வரலாறும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்பு உண்டா ?
பரம்பரை வழியாகத்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 30-40 வயதினர் கூட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். இதனால், 40 வயது முதல் அறிகுறி இருந்தாலும், இல்லை என்றாலும் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.
கேள்வி: மார்பக புற்றுநோய் வந்துவிட்டாலே மார்பகங்களை அகற்ற வேண்டுமா ?
30, 40 ஆண்டுக்கு முன் வரை, சின்ன கட்டியாக இருந்தாலும் மார்பகத்தை முற்றிலும் அகற்றும் சூழல் இருந்தது. தற்போது, ஆராய்ச்சி பல மேற்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சின்ன கட்டிகளுக்கு முழுமையாக அகற்றவேண்டிய தேவையில்லை; அந்த கட்டியுள்ள பகுதியை மட்டும் எடுத்தால் போதுமானது.கேள்வி:மார்பக புற்றுநோய் சிகிச்சையில் அதிநவீன சிகிச்சை என்னவெல்லாம் வந்துள்ளது

முன்பு 4 செ.மீ., 5 செ.மீ., கட்டிகள் உள்ள பகுதியை எடுக்கும் போது, அந்த மார்பக வடிவமைப்பு மற்றும் அளவு சரியாக இருக்காது. இதனால், முழுமையாக மார்பகம் அகற்றும் படி இருந்தது. தற்போது, பிரெஸ்ட் ஆன்கோ பிளாஸ்டி எனும் டெக்னிக் பயன்படுத்துகின்றோம். இதில், மார்பக புற்றுநோய் சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி ஒருங்கிணைந்து மேற்கொள்கிறோம்.
இதனால், மார்பகத்தின் பகுதியை எடுத்தாலும்; அதன் அளவு, வடிவமைப்பில் மாற்றம் இல்லாமல் முன்பு இருந்தது போன்று கொண்டுசொல்ல இயலும். இது முற்றிலும் பாதுகாப்பானது.

கேள்வி: மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வருமா !
கட்டாயம், ஆண்களுக்கும் வரலாம். பெண்களுக்கு பொதுவானது. ஆண்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் டாக்டரை கட்டாயம் சந்திக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வந்தால் அவர்கள் கட்டாயம் மரபணு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

டாக்டர் ராம் அபினவ், புற்றுநோய் மருந்தியல் சிகிச்சை நிபுணர் கேள்வி: மார்பக புற்றுநோய் பரம்பரையாக பரவும் தன்மை உள்ளதா 100ல் 20 சதவீதம் பேருக்கு பரம்பரை காரணமாக இருக்கலாம். அவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களை முதலில் பரிசோதனை செய்துவிட்டு; மரபணு காரணம் என தெரிந்தால், உறவினர்கள் பரிசோதனை செய்துகொள்வதும், தடுப்பு நடவடிக்கை எடுப்பதும் அவசியம். மரபணு சிக்கல் இருப்பவர்கள் முன்கூட்டியே பரிசோதனைகளை செய்துகொள்ளவேண்டும். தேவையற்ற பதட்டம், கவலை அவசியம் இல்லை. கேள்வி : கீமோதெரப்பி மார்பக புற்றுநோய்க்கு அவசியமா ஒரு காலத்தில் மார்பக புற்றுநோய் வந்த அனைவருக்கும் கீமோதெரப்பி கொடுக்கவேண்டும் என்று இருந்தது. தற்போது, அப்படி அல்ல; மார்பக புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இதில், குறிப்பிட்ட சில வகை பிரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கீமோதெரப்பி தேவை. கேள்வி: கீமோதெரப்பி, இமினோதெரப்பி என்பது என்ன கீமோதெரப்பி என்பது மருந்துகளை நரம்புகள் வலியாக செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும். இமினோதெரப்பி சமீபகாலமாக நடைமுறையில் உள்ளது. நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு புற்றுநோய் செல்களை அடையாளப்படுத்திக்கொடுக்கும். இதனால், நம் நோய் எதிர்ப்பு சக்தியே செல்களை அழிக்க துவங்கிவிடும். கேள்வி : டார்கெட் தெரப்பி என்பது என்ன ? கீமோதெரப்பி கூடுக்கும்போது, புற்றுநோய் செல்கள் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பிற செல்களும் அழியும். இதனால், தான் முடி கொட்டுவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. டார்கெட் தெரப்பி என்பது புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இதனால், அதிக டோஸ் செலுத்தலாம்; பக்கவிளைவுகள் மிக குறைவாக இருக்கும். குணமாகும் வாய்ப்புகளும் அதிகம். கேள்வி: நான்காம் நிலை மார்பக புற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியுமா பொதுவாக நான்காம் நிலை என்றாலே, சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்; சிகிச்சை அளித்து கஷ்டப்படுத்தவேண்டுமா என பலர் யோசிக்கின்றனர். 15-20 ஆண்டுக்கு முன்னர் இது சரியாக இருந்து இருக்கலாம். தற்போது உள்ள நவீன சிகிச்சை முறைகளால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்று மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டே, பல ஆண்டுகள் இயல்பான வாழ்க்கை வாழமுடியும். கேள்வி: மார்பக புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் என்னென்ன சர்ஜரி, ரேடியேசன், கீமோதெரப்பி அல்லது டார்கெட் தெரப்பி போன்றவை. சர்ஜரி பண்ணும் போது சற்று வலி இருப்பது இயல்பு; 100ல் 20 பேருக்கு கைவீக்கம் போன்றவை வரலாம். ரேடியேசன் கொடுக்கும் போது சின்ன சின்ன புண்கள் வருவது, கருப்பாவது போன்றவை இருக்கும். கீமோதெரப்பி போன்றவை எடுத்தால் முடி கொட்டுவது இருக்கும். சோர்வு, சாப்பிட ஆர்வமின்மை இருக்கலாம். இவை அனைத்தும் சரியாகிவிடும். சிகிச்சை முறைகள் போன்று, பக்கவிளைவுகளை குறைப்பதிலும் நல்ல மருத்துவ முன்னேற்றங்கள் இருப்பதால், கவலை வேண்டாம்.

டாக்டர் ரூபா, மார்பக புற்றுநோய் கதிரியக்க துறை சிகிச்சை நிபுணர்

கேள்வி: மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன ? மார்பக புற்றுநோய் ஆரம்பநிலையில் எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது. மார்பகத்தில் வலி இல்லாத கட்டி, அக்கிள் பகுதியில் கட்டி, மார்பக தோல் தடிமனாகவும் சிவந்தும் இருக்கலாம். காம்பில் தானாக நீரோ, ரத்தம் வந்தால் இதன் அறிகுறியாக உள்ளது. கேள்வி: எனக்கு மார்பகத்தில் சின்ன கட்டி போல் இருக்கு; ஆனால், வலி இல்லை.. இதற்கு பயப்பட வேண்டுமா ? நாம் எப்போதும், புற்றுநோயையும், வலியையும் ஒன்றிணைத்து பார்க்கின்றோம். வலி இல்லை என்றால் பலர் கட்டியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். வலி இல்லாத கட்டி தான் முக்கிய அறிகுறி. கேள்வி: மூன்று ஆண்டுக்கு முன்னர் மேமோகிராம் பரிசோதனை எடுத்துள்ளோம். மீண்டும் மேற்கொள்ள வேண்டுமா ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். கேள்வி: 21 வயது தான் ஆகிறது … மார்பகத்தில் கட்டி போன்று உள்ளது. மேமோகிராம் செய்துகொள்ளலாமா பதில்: 30 வயதுக்கு முன்னரும், மார்பகத்தில் கட்டி இருந்தால் பரிசோதனை என்பது முக்கியம். குறைந்த வயதினருக்கு மேமோகிராம் அவசியமில்லை; அல்ட்ராசவுண்ட் போதுமானதாக இருக்கும். 12-30 வயதினருக்கு புற்றுநோய் இல்லாத, பைப்ரோஅடினோமா கட்டி பொதுவாக காணப்படும். இக்கட்டி தொந்தரவு இருந்தாலோ, வளர்ந்து கொண்டே போனாலோ சர்ஜரி இல்லாமலே கட்டியை அகற்றமுடியும். கேள்வி: மேமோகிராம் பரிசோதனை வலி அதிகம் இருக்குமா மேமோகிராம் பரிசோதனை என்பது இரண்டு பிளேட்டுக்கு நடுவில், மார்பகத்தை வைத்து ஓர் லேசான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. வலி தாங்க முடியாத அளவிற்கு இப்பரிசோதனை இருக்காது. சிறிய அசவுகரியம் இருக்கும். கேள்வி: வரும் முன் காப்போம் என்பதற்கு, வாழ்வியல் மாற்றம் என்ன செய்யவேண்டும் பொதுவான ரிஸ்க் காரணங்களான துரித உணவு தவிர்ப்பது, மனநல மேலாண்மை, உடல் பருமன், ஆல்கஹால் பயன்பாடு தவிர்க்க வேண்டும். உடல்பருமன் குறிப்பாக மெனோபாஸ் ஆன பிறகு உடல் எடை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியம். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.