குறிச்சி குளத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

போத்தனுார், ; விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, 27ல் ஹிந்து அமைப்புகள், குடியிருப்போர் சார்பில் பொது இடங்களில், இரண்டடி முதல் 10 அடி வரையிலுமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தன.போத்தனுார், சுந்தராபுரம், குனியமுத்துார், மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 303 சிலைகள் வைக்கப்பட்டன. முதல் நாளில் குறிச்சி குளத்தில், குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில் சிவசேனா சார்பில் அமைக்கப்பட்ட சிலை விசர்ஜனம் செய்யப் பட்டது.

இரண்டாம் நாள் சித்தண்ணபுரம் சாமன்னா நகரில் வைக்கப்பட்ட சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.நிறைவு நாளான நேற்று, மதியம் 12 மணி முதல் ஒவ்வொரு அமைப்பு சார்பிலும் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, குறிச்சி குளத்தில் கரைக்கப்பட்டன. மதுக்கரை செட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள், வாளையார் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

திரளானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. சிலைகளுடன் சிலர் மட்டுமே நீரில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.