கோவை; சித்தாபுதுாரில் துாய்மை பணியாளர்களுக்கான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வெளிநபர்களுக்கு உள்வாடகைக்கு கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் ஒத்துழைத்தால் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் சித்தாபுதுாரில், ஏழு தளங்களில், 226 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு துாய்மை பணியாளர்களுக்கென்று கட்டப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு பெற்றவர்கள் ரூ.1.10 லட்சம் செலுத்தி கடந்தாண்டு முதல் வசித்துவருகின்றனர். இதில், 206 பேர் வரை குடியேறியுள்ளனர். இந்நிலையில், குடியிருப்பு ஒதுக்கீடு பெற்ற, 30க்கும் மேற்பட்டோர் வெளியாட்களை உள்வாடகைக்கு குடியமர்த்தியுள்ளனர்.
மாத வாடகைக்கும், சிலர் போக்கியத்திற்கும் விட்டுவிட்டு வெளியே சொந்த வீடுகளில் வசித்துவருகின்றனர்.
இதில், குடும்பத்துடன் வசிப்பவர்களால் பெரும்பாலும் பிரச்னைகள் வருதில்லை. ஆனால், திருமணமாகாத நபர்கள் இரவு நேரங்களில் தகாத வேலைகளில் ஈடுபடுவதாக குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர்.
கண்காணிப்பு தேவை! குடியிருப்புவாசிகள் கூறியதாவது:இக்குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வெளிநபர்களுக்கு உள்வாடகைக்கு கொடுத்துள்ளனர். இப்படி தங்கியிருக்கும் திருமணமாகாத இளைஞர்கள் இரவு நேரங்களில் குடித்துவிட்டு பிரச்னைகளை கிளப்புகின்றனர். குடியிருப்பு வளாகத்திலும் அமர்ந்து குடிக்கின்றனர்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களும் இங்கு திருட்டு போகிறது. எனவே, சுற்றிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். மேலும், காம்பவுண்ட் சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாக்கடை அடைப்பு பிரச்னையால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஒத்துழைப்பு இல்லை! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜீவானந்தம் கூறியதாவது:
குடியிருப்போர் நலச்சங்கம் பங்களிப்புடன் ‘நம் குடியிருப்பு நம் பொறுப்பு’ திட்டத்தின் வழியாக பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
குடியிருப்புகளின் பராமரிப்பு செலவுகளுக்கான மொத்த செலவில் பாதி அரசாலும், பாதி சங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இக்குடியிருப்பில் வசிப்பவர்கள் இதற்கான பங்களிப்பு தொகையை தருவதில்லை. எல்லாமே அரசுதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். சங்கத்தினர்தான் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். உள்வாடகைக்கு இருப்பவர்களின் பட்டியல் தயார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply