பெ.நா.பாளையம்; கோவை புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் கோவை மாவட்ட போலீசார், கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த, சாதனைகளாக கருதப்படும், நிகழ்வுகளை அறிவிப்புகளாக மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.இது குறித்து, புறநகர் போலீசார் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுபடி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதில் எஸ்.பி.,யை பொதுமக்கள், நேரடியாக சந்தித்து தங்களுடைய குறைகளை கூறி, நிவாரணம் பெற்று வருகின்றனர்.

காணாமல் போன, 2,957 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ துவக்கப்பட்டு, இரண்டு லட்சம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் அவசர கால பயன்பாட்டுக்காக ஏற்கனவே உள்ள ‘காவல் உதவி’ செயலி மேம்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதை பொருளை முற்றிலுமாக ஒழிக்க ‘மிஷன் கல்லூரி’ துவக்கப்பட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ‘லைப் காட்ஸ்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சிக்கி தவிக்கும் நபர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில், ஒரு மாத பேக்கப் வசதியுடன் கூடிய, 13 போலீஸ் ரோந்து வாகனங்களில் உயர்ரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.’சகோ ஆப்’ என்ற செயலி வாயிலாக திருட்டுக்களை தடுக்க பூட்டி இருக்கும் வீடுகளை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயல் திட்டங்களால் இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன் பெற்றதோடு, குறுகிய காலத்தில் போலீசை தொடர்பு கொண்டு, அவர்களுடைய உதவிகளை, உரிய நேரத்தில் பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, புறநகர் போலீசார் கூறினர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,’ போலீசார் நான்காண்டு சாதனைகள் என்று கூறிக் கொள்ளும் பெரும்பாலானவை அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் தான். அவர்களின் பணிகள் தான் அவை.
எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொண்டு வரும் நபர்களை போலீசார் வெறுப்பு உணர்வுடன் பார்க்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலான புகார்கள் கட்டப்பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டு, அனுப்பப்படுகின்றன. மொபைல் போனை தவறவிட்டால், போலீஸ் ஸ்டேஷன்களில் உரிய வழிகாட்டுதல்களை வழங்க மறுக்கின்றனர். ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஒரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான புகார்கள் வந்தால், போலீசார், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செல்லும்படி கூறுகின்றனர். அவர்கள் அதை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல், இழுத்தடிப்பது தொடர்ந்து நடக்கிறது.
மாணவர்களிடையே போதை கலாசாரத்தை ஒழிக்க மிஷன் கல்லூரி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது வெறும் கண் துடைப்பாக மட்டுமே உள்ளது. கல்லூரிகளில் போதை கலாசாரம் தறி கெட்டு ஓடுகிறது.
போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் அதிகளவு பொருத்தப்பட்டதால், குற்ற செயல்கள் நடப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. குற்றம் செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவியாக உள்ளது’ என்றனர்.
Leave a Reply