கோவை; தி.மு.க., கூட்டணி கட்சியான மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம், நேற்று முன் தினம் கோவை கலெக்டர் அலுவலகம் முன், விவசாயிகளுடன் தரையில் அமர்ந்து, ஏழு மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே, போராட்டத்தில் இறங்கும் அளவுக்கு அப்படி என்ன பிரச்னை என விசாரித்தபோது, பாரதியார் பல்கலை அமைவதற்காக, 48 ஆண்டுகளுக்கு முன், 1977ல் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ், 1,200 விவசாயிகளிடம், 925.84 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதும், இதில், 799.67 ஏக்கர் நிலத்துக்கு இன்று வரை, இழப்பீடு வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது.

தங்களுக்கு விடியல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், 2021ல் சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., சார்பில் கோவையில் நடந்த, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், விவசாயிகள் பங்கேற்று முறை யிட்டனர்.
ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் துவண்டு விட்டனர். இருப்பினும், முன்னாள் எம்.பி., நடராஜன் தலைமையில், 2023ல் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.
அப்போதைய கலெக்டர் கிராந்திகுமார், இப்பிரச்னையை ஆய்வு செய்து, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆனால், தமிழக அரசு கிடப்பில் போட்டு விட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்காததால், மனம் நொந்து போயிருந்த அவர்கள், காத்திருப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை ஏழு மணி நேரம் போராட்டம் நடந்ததால், அதுவும் மா.கம்யூ., சண்முகம் தலைமையில் நடந்ததால், முதல்வரின் நேரடி கவனத்துக்குச் சென்றிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, பேச்சு நடத்துவதாக உறுதியளித்திருக்கிறார். வரும், 12ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார். அதற்கு முன், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply