கோவை: மத்திய மற்றும் தமிழக வனத்துறை அமைச்சகம் சார்பில், யானைகள் தின விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.மத்திய வனத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. யானைகளைப் பாதுகாக்க, வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்.

யானைகள் மட்டுமல்லாது, சிங்கம், புலி, பனிச்சிறுத்தை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டி வருகிறோம்.
பிரதமர் மோடி, வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மிகத் தீவிர அக்கறை காட்டுகிறார். சிவிங்கிப் புலியை இந்தியாவுக்கு கொண்டு வந்தது, முக்கிய வரலாற்றுத் தருணம்.இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய வனத்துறை சிறப்பு செயலர் சுஷீல் குமார் அவஸ்தி பேசுகையில், “நாட்டில் 33 யானைகள் காப்பகம் 80 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பில் பாதுகாக்கப்படுகிறது. 14 மாநிலங்களில் யானைகளுக்கு ஆபத்தான, 110 ரயில் பாதைகள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.
யானைகள் தினவிழாவை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, ‘கஜ கவுரவ்’ விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவர் ராகேஷ் குமார் டோக்ரா உட்பட வனத்துறையினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அகற்றப்பட்ட அந்நிய தாவர ஊடுருவல்கள்
தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு பேசுகையில், “தமிழக வனத்துறை, கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து, வன விலங்கு கணக்கெடுப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வனவிலங்குகளின் இயற்கை வாழிடங்களைப் பாதுகாப்பது முக்கிய சவால். அந்நிய தாவர ஊடுருவல்கள் 21 ஹெக்டர் பரப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. வன உயிரினங்கள், வனவளங்களைப் பாதுகாக்க, தமிழக வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் நிறுவப்பட்டுள்ளது,” என்றார்.
Leave a Reply