கோவை; காந்திபுரத்தில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள,காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்று இடம் தேடும் முயற்சி முடிவுக்கு வந்தது. ராம்நகர் ரங்கநாதபுரத்தில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க,மாநகராட்சி ஒப்புதல் அளித்து, மின்னல் வேகத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர், மாநகராட்சி உறுப்பினர்கள் ஆகிய எந்த தரப்புக்கும் தெரிவிக்காமல் அதிரடியாக முடிவு எடுத்த மாநகராட்சி நிர்வாகத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டித்தனர்.நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்தனர்.கவுன்சிலர் சாந்தி பேசும் போது, “ ரங்கநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை அமைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குற்றவாளிகள், போலீசார் அடிக்கடி வந்து செல்லும்போது, அங்கு பயிலும் ஏராளமான குழந்தைகள் மனரீதியாக பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பள்ளி வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கக் கூடாது. மாநகராட்சிக்கு சொந்தமான வேறு ஏதாவது இடத்தில் அமைக்கலாம்” என்றார்.

மன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் மாநகராட்சி இந்த முடிவை எடுத்தது முறையல்ல என்றும் சாந்தி குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சியும் மாநகர போலீசும் கலந்து ஆலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டது. இது தற்காலிக ஏற்பாடு தான். மூன்று மாதம் தான் காட்டூர் போலீஸ் நிலையம் பள்ளி வளாகத்தில் செயல்படும். எனவே, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றார்.
மாமன்ற கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். கமிஷனர் முன்னிலை வகித்தார். 24 கவுன்சிலர்கள் வரவில்லை. விவாதமே இல்லாமல், ‘ஆல்-பாஸ்’ முறையில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை, 10:30க்கு துவங்கிய கூட்டம், 11:40க்கு முடிந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
லக்குமி இளஞ்செல்வி (வார்டு 52): அ.தி.மு.க.வினர் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ‘டிஜிட்டல்’ பலகை நிறுவுகின்றனர்; அதை அனுமதிக்கக்கூடாது. நாங்களும் வைக்க ஆரம்பித்தால், மாநகராட்சி தாங்காது.மாலதி (வார்டு 34): எனது வார்டில் தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளார்கள். மற்ற கட்சிகளின் கம்பங்களையும் அகற்ற வேண்டும்.
மாரி செல்வன்(வார்டு 30): துாய்மை பணியாளர்கள் அதிகாலை முதலே சுகாதார பணிகளில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் சில தவறுகள் நேரலாம். தவறு செய்வோர் மீது கருணை காட்ட வேண்டும் .
ராமமூர்த்தி (வார்டு 12): சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளதால், வார்டுகளில் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த வேண்டும். திட்டச்சாலை பணிகளை துவக்க வேண்டும்.
சிவா (வார்டு 60): உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனியில் ஆர்.ஓ. குடிநீர் வசதி ஏற்படுத்தியதற்காக, அ.தி.மு.க.வினர் ‘டிஜிட்டல்’ பலகை நிறுவுகின்றனர்; அதை அனுமதிக்க கூடாது.
கார்த்திக் செல்வராஜ் (வார்டு 72): பெரிய கடைகளில் பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடவில்லை. குழந்தைகள் வாங்கி தின்கிற உணவு பண்டங்களிலும் இல்லை. இதை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.
ஆப்சென்ட் கவுன்சிலர்கள்
வார்டு எண் 6, 16, 17, 18, 19, 33, 38, 44, 46, 53, 64, 66, 69, 71, 74, 78, 83, 85, 89, 94, 95, 96, 98, 100 ஆகியவற்றின் கவுன்சிலர்கள் வரவில்லை. திமுக குழு தலைவர் கார்த்திகேயன், மத்திய மண்டல தலைவர் மீனா, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, முன்னாள் மேயர் கல்பனா, அ.தி.மு.க. கவுன்சிலர் ஷர்மிளா உள்ளிட்டோர் இதில் அடங்குவர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், மன்றத்துக்கு வெளியே தர்ணா போராட்டம் செய்து விட்டு கிளம்பினார்.
‘அனுமதி பெற்றே விளம்பரம்’
கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசும்போது, ”டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ஆய்வு செய்யப்படும். வளர்ச்சி பணிகள் வேகப்படுத்தப்படும். அனுமதி பெற்றே, ‘டிஜிட்டல்’ பலகை நிறுவுகின்றனர். அனுமதி பெறாதவை அகற்றப்படும். நிதி வந்ததும் திட்டச்சாலை பணி முடிக்கப்படும்,” என்றார்.
Leave a Reply