மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று விமரிசையாக நடந்தது. திருக்குடநன்னீராட்டு விழாவையொட்டி, பிரதான ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் மொத்தம் 18 கலசங்கள் பொருத்தப்பட்டன. யாக சாலை பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில், 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. ஏப்.1.,ல் முதற்கால யாக வேள்வி துவங்கியது. நேற்று ஐந்தாம் கால யாக வேள்வி நடந்தது.

Latest Tamil News

திருக்குடநன்னீராட்டு விழாவான நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜை, திருமுறை பாராயணத்தை தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு 6-ம் கால வேள்வி நடந்தது. காலை 6:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கும், காலை 8:30 மணிக்கு கோவில் கருவறையிலுள்ள மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்திற்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

அப்போது பக்தர்கள், ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர்.

பின்னர் ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜப் பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, சமகால கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மஹாஅபிஷேகம், திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடந்தது. திருக்குட நன்னீராட்டு விழாவில், ‘ட்ரோன் ‘ மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் துணைவியார் சாந்தி, மேயர், துணைமேயர், மண்டல தலைவர்கள், கோட்டாட்சியர்கள், ஹிந்துசமய அறநிலையத்துறை இணைகமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் செந்தில்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழிலும் கும்பாபிேஷகம்

சிவாச்சாரியர்களில் ஒரு பகுதியினர், தமிழிலும் ஒரு பகுதியினர் சமஸ்கிருதத்திலும் திருக்குடநன்னீராட்டு விழாவை நடத்தினர். முதலில் சமஸ்கிருதத்தில் சிவாச்சாரியர்கள் பாராயணம் செய்ய, அடுத்து தமிழில் வேதமந்திரங்களை பாராயணம் செய்தனர். இதை பக்தர்கள் பயபக்தியுடன் கேட்டனர்.