வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 4ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்குப்பின், கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்காக கடந்த ஜனவரி மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த, மார்ச் 31ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை, 9:30 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம் நடந்தது. தொடர்ந்து, கன்னிமார் கோவில் பின்புறம் உள்ள சுனை தீர்த்தக்கிணற்றில் இருந்து, புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
அதன்பின், சிறப்பு பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர், பாலாலயம் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.அதன்பின், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான சுப்பிரமணியசுவாமி, ஆதி மூலவர் கலாகரிஷனம் நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் ஹோமம் செய்யப்பட்டு, முதற்கால யாகசாலை பூஜை துவங்கியது.இதில், பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், பண்ணிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர்.இரவு 10:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.வரும் 4ம் தேதி, காலை 8:30 முதல் 9:30 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
Leave a Reply