ஏழை மக்களிடம் நிலம் அபகரிப்பு நடப்பது அதிகரிப்பு; புகார் செய்தால் அதிகாரிகள் நிராகரிப்பு

கோவை; கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு இலவச பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை கேட்டு வரும் மனுக்களை விட, நில அபகரிப்பு தொட்பாக வரும் மனுக்கள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.பாடுபட்டு பணம் சம்பாதித்து, அதில், சொத்துக்களை வாங்கி, அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து, அசல் பத்திரத்தை கையில் வைத்திருந்தாலும்கூட, மோசடி தொடர்ந்து நடக்கிறது.

போலி பத்திரம் போலி ஆவணங்களை வைத்து, பத்திரம் தயார் செய்வதை தடுக்க வருவாய்த்துறையும், பதிவுத்துறையும் பெரும் முயற்சி எடுத்தும், குற்றங்கள் குறையவில்லை. கோவையிலுள்ள பத்திரப்பதிவு, வருவாய்த்துறையில் சமீபகாலமாகவே, சொல்ல முடியாத அளவுக்கு லஞ்சம் பெருக்கெடுத்து வருகிறது. ஒருபக்கம் லஞ்சம் வாங்குவது கொடுமையென்றால், மற்றொரு பக்கம், போலியான ஆவணங்களை, அசல் ஆவணம் போல தயாரித்து, அதை வைத்து எண்ணிலடங்கா மோசடிகள், அரசு அதிகாரிகளின் உதவியோடு நடக்கின்றன.

நிலத்தை இழந்து தவிக்கும் ஏழை மக்கள், வேறு வழியின்றி, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், புகார் அளிக்க திரண்டு வருவது அதிகரித்து வருகிறது.

ஆரம்ப காலத்தில் ஒன்று, இரண்டு என்று வந்து கொண்டிருந்த மனுக்களின் எண்ணிக்கை, தற்போது 10, 20 என்று உயர்ந்து தற்போது, 50ஐ எட்டி பிடித்துள்ளது.

நில மோசடி புகாரில் சில: நிலம் அபகரித்த மகன் சூலூர் பாப்பம்பட்டியை சேர்ந்த பூபதிஅம்மாள்,75 கொடுத்த புகார்:

எனக்கு 2 மகன், 2 மகள்கள். மலுமிச்சம்பட்டியில் 6.5 சென்ட் நிலம் இருந்தது. இதில், 1 சென்ட் இடத்தை என் இளைய மகன் பாக்கியராஜுக்கு எழுதி கொடுத்தேன்.

ஆனால் என் மகன், எனக்கு தெரியாமல் மொத்த இடத்தையும் அபகரித்துக்கொண்டார். அத்துடன் என்னையும், கணவரையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்.
கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நிலம் அபகரித்த என் மகனுக்கு ஆதரவாகவே, வருவாய்த்துறையினர் செயல்படுகின்றனர்.

நிலம் அபகரித்த குத்தகைதாரர் பெரியநாயக்கன்பாளையம் பழையபுதூரை சேர்ந்த தர்மராஜ் மனு:

பழையபுதூரில் எனக்கு, 3.80 ஏக்கர் நிலம் இருந்தது. இதை நாராயணன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்தோம். அவரும் அவரது மகனும் இணைந்து, எனது நிலத்தை அபகரித்து அவர்களது பெயருக்கு மாற்றி கொண்டனர். இது தொடர்பாக புகார் கொடுத்தும் விசாரிக்கவில்லை.

ஏமாற்றிய அர்ச்சகர் தடாகம் ராபர்ட்சன் சாலையை சேர்ந்த புவனேஸ்வரி,60, அளித்த மனு:

சில ஆண்டுகளுக்கு முன், பால் கம்பெனி பகுதியில் கோவில் அர்ச்சகராக இருந்த விஜயன் என்பவர் இடம் வாங்கித் தருவதாக என்னிடம் பணம் வாங்கினார். மாத சீட்டு வாயிலாக, 40 மாதம் பணி செலுத்தி, அவரிடம் நிலம் வாங்க முயன்றேன். ஆனால் அவர் நிலம் தரவில்லை. அவர் ஒரு மோசடி நபர் என்பதும், தலைமறைவானதும் தெரிந்தது.

சில மாதங்களுக்கு முன், சம்பந்தப்பட்ட இடத்தை கண்டறிந்து புகார் தந்தேன். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரித்து, அப்படியே விட்டு விட்டனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால் தகாத வார்த்தையில் பேசுகின்றனர். கலெக்டர்தான் உதவ வேண்டும்.

– இது போன்று கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மட்டும் 30 க்கு மேற்பட்ட மனுக்கள் வந்தன. அதே போல், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களிலும், நிலமோசடி தொடர்பான புகார் மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மோசடி நபர் களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும், நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.